ராம் தங்கம் எழுதிய திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்தேன். இத் தொகுப்பில் உள்ள திருக்கார்த்தியல் கதையை ஆனந்தவிகடனிலும், உடற்றும் பசி சிறுகதையை உயிர் எழுத்து இதழிலும் ஏற்கனவே வாசித்திருந்தேன். இந்த இரு சிறுகதைகளும் மிகச்சிறப்பான கதைகள் என்ற அளவிலான என் மனநிலையிலேயே நான் கடந்து போயிருந்தேன். அதன் பிறகு தொகுப்பு கையில் கிடைத்தபிறகு டாக்டர் அக்கா தொடங்கி ஒவ்வொரு கதையாக வாசிக்கத் தொடங்கினேன். உண்மையில் சொல்லப் போனால் ஒரே மூச்சில் என்னால் இதிலுள்ள கதைகளை வாசிக்க முடியவில்லை. ஒவ்வொரு கதையும் தந்த வலி பெரிது.
டாக்டர் அக்கா தொடங்கி,முற்பகல் செய்யின், பெரிய நாடார் வீடு, ஊழிற்பெருவலி, வெளிச்சம், விரிசல், பானி, காணி வாத்தியார் என ஒவ்வொரு கதைகளும் என்னைப் பிடித்து உலுக்கி விட்டன. பகலில் மாட்டு இறைச்சிக் கடையிலும், இரவினில் சூப் கடையிலும் வேலை பார்க்கும் சிறுவனின் கதையான ‘கடந்து போகும்’ கதையின் கடைசி பத்திகளைப் படிக்கும் போது மனம் பதற்றத்திற்குள்ளாகுகிறது. கடந்து போகும் கதை, மனதை விட்டு ஒருபோதும் கடந்து போகாது. கடந்து போகும் போன்ற ஒரு கதையை நான் இதுவரை படித்ததும் இல்லை.
ஒவ்வொரு கதையும் உணர்வுகளையும், வலிகளையும் வாசகனுக்குள் கடத்துகிறது என்பது தான் இத் தொகுப்பின் சிறப்பு. அதுதான் ராம் தங்கத்தின் எழுத்தாற்றல்.
புத்தக அணிந்துரையில் நாஞ்சில் நாடன் அவர்கள் குறிப்பிட்டுள்ளது போன்று ராம் தங்கத்தின் முன்னால் இலக்கியக் காட்டுப் பாதை வளைந்தும், நெளிந்தும், இறுகியும், முட்செறிந்தும், கரடு முரடான கற்கள் நிரந்தும், நச்சரவங்கள் ஊர்ந்தும் காணக்கிடக்கிறது. எல்லாவற்றையும் கடந்து மிகுந்த உயரங்களைத் தொடுவார் ராம் தங்கம்.
வாழ்த்துகள் தம்பி.
– லாசர் ஜோசப்