அன்று திருக்கார்த்தியல். எனக்கு எப்போதும் மருத்துவாழ்மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தை பார்ப்பது ரொம்ப பிடிக்கும். திருக்கார்த்தியல் அன்று அந்த மலையை நான் ஒருபோதும் நினைக்காமல் இருந்ததில்லை. மருத்துவாழ்மலை தீபத்தை பார்க்க வீட்டில் இருந்து கிளம்பினேன். என் வீட்டிலிருந்து பார்த்தால் மருத்துவாழ் மலை தீபம் தெரியாது. மணி ஏழரை இருக்கும் வண்டியில் கிளம்பினேன்.
மணக்குடி வழியில் சென்றால் பார்க்கலாம். ஆனால் இந்த முறை நான் சுசீந்திரம் பாதையில் பயணம் செய்தேன். பனி இறங்கியிருந்தது வாகனங்களில் வெளிச்சத்தில் கொஞ்சம் மங்கலாக தெரிந்தது. சுசீந்திரத்தை நெருங்குகையில் பைப்பாஸ் வழிப்போகாமல் சுசீந்திரம் மெயின்ரோடு வழியாக பயணம் செய்தேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட மழை வெள்ளப்பெருக்கு நீர் வடிந்து கொஞ்சம் உறைந்துபோய் கிடந்தது. கோயில்களில் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தது. பொதுவாக நாஞ்சில் நாட்டில் நாட்டார் தெய்வங்கள் அதிகம். அடுத்தடுத்து நெருக்கமாக கோவில்கள் வருவது போல இருக்கும். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் கூடுதலாக வழிபாடு உண்டு.
சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவிலைக் கடந்து தாணுமாலயன் கோவில் நுழைவு கோபுரம் அருகில் வரும்போது பழையாற்றைப் பார்த்தேன். ஆறு எந்த சலனமும் இல்லாமல் உயிர்ப்போடு போய்க்கொண்டிருந்தது. இருபக்கமும் உள்ள வெளிச்சங்கள் ஆற்றில் விழுந்து கொண்டிருந்தன. எத்தனை வெளிச்சம் வந்தாலும் எல்லாவற்றுக்கும் இடம் கொடுப்பது போல தண்ணீர் பரந்து கிடந்தது. சுசீந்திரம் கோவிலில் நீர் முழுவதும் வடிந்து இருந்ததை ஆற்றில் நீரோட்டம் குறைவாக இருக்கும்போதே உணர முடிந்தது. சுசீந்திரம் பள்ளிக்கூடம் அருகில் வரும்போது மருத்துவாழ் மலை உச்சியில் தீபம் எரிந்து கொண்டிருந்தது தெரிந்ததை பார்த்ததும் உடல் ஒரு நிமிடம் சிலிர்த்து அடங்கியது.
இங்கிருந்து பார்க்கும்போது தான் தீபம் தெரிவது தொடங்குகிறதோ என்று மனதில் கேள்வி எழுந்தது. சுசீந்தரம் பழையப் பாலத்தை கடக்கும் போது ஆற்றை ஒரு முறை பார்த்தேன். நீர் கலங்கிய போய்க் கொண்டிருந்தது தெரிந்தது. ஒருபக்கம் ரோட்டைப் பார்த்து வண்டி ஓட்டினாலும் கண்கள் மருத்துவாழ் தீபத்தின் மேலேயே இருந்தது. தூரத்தில் இருந்து பார்க்க அனுமனின் மூக்கில் தீபம் எரிவது போல இருந்தது. எந்த ஊரில் இருந்து பார்க்கும் போதெல்லாம் தீபம் தெரிகிறது என்று கணக்கிட்டுக் கொண்டே வரும் போது இடையில் செங்கட்டி பாலம் அருகில் தெரியவில்லை. அதன்பின் வழுக்கம்பாறை தாண்டியது சரியாகத் தெரியத் தொடங்கியது.
பொற்றையடியை நெருங்க நெருங்க மருத்துவாழ் மலை வானத்தை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் முகமாகவும், அவளது மூக்குத்தியின் வெளிச்சம் தீபமாகவும் எரிந்து கொண்டிருந்தது. எத்தனை ஆச்சரியம் முதலில் அனுமன் இப்போது கன்னியாகுமரி பகவதி அம்மனின் முகமாகவே எனக்கு தெரிந்தது. அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு சென்றபோது அதில் விழுந்த துண்டுதான் இந்த மருத்துவாழ்மலை என்றும் சொல்லுவார்கள்.
பொற்றையடியில்தான் மருத்துவாழ்மலை இருக்கிறது. ஆனால் அந்த ஊரில் உள்ளவர்களுக்கு மலையில் எரியும் தீபம் தெரியாது. தீபத்தை அந்தப்பகுதியில் இருக்கும்போது பார்க்க முடியவில்லை. அதை கடந்து செல்லும்போது தீபத்தை மீண்டும் என்னால் பார்க்க முடிந்தது. அதன்பின் கன்னியாகுமரி நோக்கி பயணமானேன். வழக்கமாகப் போகும் செல்வி அக்கா கடை இன்று பூட்டியிருந்தது. கோவிலில் வடக்கு ரத வீதியில் வரும்போது சொக்கப்பனை கொளுத்த எல்லாவற்றையும் தயார் செய்து வைத்திருந்தார்கள். அம்மன் வீதி உலா வந்து அதன்பின் தான் சொக்கப்பனை கொளுத்தப்படும் என்று சொன்னார்கள். பெரும்பாலும் இரவு 10 மணிக்கு மேல் தான் கொளுத்தப்படும் என நினைக்கிறேன். அது காலம் காலமாக நடந்து வருகிறது.
கன்னியாகுமரியில் பயணிகள் நடமாட்டம் அறவே இல்லை பொதுவாக கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதியானால் கன்னியாகுமரியில் சீசன் களைகட்ட தொடங்கிவிடும். ஆனால் அதற்கான எந்த சுவடுகளும் அற்றுப்போய் கன்னியாகுமரி எப்போதும்போல இயல்பு நிலையில் இருந்தது.மீண்டும் கன்னியாகுமரி கடற்கரை சாலை வழியாக சுற்றி பார்த்தேன். விவேகானந்தர் மண்டபத்தில் வெளி லைட்டுகள் போடப்பட்டிருந்தன. திருவள்ளுவர் சிலையின் வெளிச்சம் தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரிந்தது. காந்தி மண்டபத்தை எப்போதும் பார்க்கும்போது எனக்கு அது ஒரு ராட்டை போலவே தெரியும். அந்த மண்டபத்தின் வடிவமைப்பு அப்படி தான் போல. அங்கிருந்து பார்க்கும்போது கலங்கரை விளக்கத்தின் வெளிச்சம் தெரிந்தது. அதன் அருகே வந்து பார்க்கையில் ஒரு பெரிய வைரக்கல் ஒளிவீசிக் கொண்டிருப்பது போலவே புலப்பட்டது.
திருக்கார்த்திகை அன்று நான் எழுதிய திருக்கார்த்தியல் கதை களத்தில் இருப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். மனதுக்கு அது எப்போதும் நெருக்கமானதும் கூட. கடந்த ரெண்டு மூன்று ஆண்டுகளாக அந்தப் பகுதியில் நான் கொஞ்ச நேரம் இருப்பேன். சாலையின் ஓரத்தில் இருக்கும் திண்டில் உட்கார்ந்து மருத்துவாழ்மலை தீபத்தை பார்த்துக் கொண்டிருப்பேன். ஊரெல்லாம் கொழுக்கட்டை மனம் எழுந்து வரும் அதை முகர்ந்த படியே கிளம்புவேன்.
திரும்பவும் நாகர்கோவில் நோக்கி பயணம். கன்னியாகுமரி பைபாஸ் வழியாக வந்து சமாதானபுரம் வழியாக வந்து கொண்டிருக்கும்போது சிஎஸ்ஐ கோவிலின் பஜனை எனக்கு நேரெதிரே வந்து கொண்டிருந்தது. கார்த்திகை மாதம் ஆனால் பஜனை நடக்கும். அதன்பின் பூஜபுரை விளை வழியாக வந்து பெரிய குளத்தை நெருங்கும்போது இரவுநேர ஆழப்புழா போலவே தெரிந்தது. படகு வீடுகள் அங்கு விடலாம் அந்த அளவிற்கு பெரியகுளம்.
சுடலைமாடன் கோவில், செங்கிடாகாரன் கோவில், இசக்கி அம்மன் கோவில் என நாட்டார் தெய்வங்கள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்து கொண்டிருந்தது. சாலையின் இருபுறமும் வீடுகளில் தீப ஒளி நிறைந்திருந்தது. பகலைவிட நெருப்பு இரவில் தான் அழகாக தெரியும். இரவின் வெளிச்சத்தில் நெருப்பு ஒவ்வொரு விளக்கிலும் அலைந்து கொண்டிருந்தது. இதை பார்ப்பதுதான் எவ்வளவு அழகு.
மணக்குடி பாலத்தில் இருந்து பார்க்கும்போது மருத்துவாழ்மலை தீபம் நன்றாக தெரிந்தது. அதன்பின் புத்தளம் பறக்கை வழியாக திரும்பி வரும்போது மருத்துவாழ் மலை தீபம் என்னை விட்டு என் கண்களை விட்டு மறைந்து இருந்தது. காணும் இடம் எங்கும் தீபங்களாக ஜோதியாக திருக்கார்த்திகை சுடர் விட்டுக் கொண்டிருந்தது.
– ராம் தங்கம்