திருக்கார்த்தியல் -ஊழின் நிழல்
ராம் தங்கம் எழுதிய “திருக்கார்த்தியல்” சிறுகதைத் தொகுப்பினை வாசித்தேன். இவ்வளவு யதார்த்த பண்பு கூடியதொரு சமகாலப்படைப்பை எனது வாசிப்பில் கண்டதில்லை. வாழ்வின் மீது கவிந்துபோயிருக்கும் கண்ணுக்குத்தெரியாத “ஊழ்” ஒவ்வொரு கதையின் பிரதான கதாபாத்திரங்களின் மீதும் சுழன்றாடுகிறது. இத்தொகுப்பிலுள்ள பதினோரு கதைகளில் நினைவோட்ட உத்தியைப் பயன்படுத்தி எழுதப்பட்டிருக்கும் கதைகள் பல. பசியினால் சிதிலமாக்கப்பட்ட சிறுவர்களைச் சுற்றியே நிகழ்கிறது. ரணம் பொருந்திய விரும்பத்தகாத புறக்கணிப்புக்களைச் சந்தித்தவர்களைச் சுற்றியும் நிகழ்கிறது. நலிவின் சரிவுகளுக்குள் ஜீவிக்கும் விளிம்புநிலை மனிதர்களை தன்கதையூடாக மொழியின் நிழலில் இருத்தியிருக்கிறார் ராம் தங்கம். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
எந்தக் காலகட்டத்திலும் உணவற்றவர்களுக்கு பசியென்பது பாசிசமே. இப்பாசிசத்தை ஒழிப்பதற்குத் தான் உலக அறங்கள் ஒன்று சேரவேண்டும். திருக்கார்த்தியல் கதையில் வருகிற செந்தமிழ் என்கிற ஆறாவது வகுப்புபடிக்கும் சிறுவனின் உணவு குறித்த ஏக்கமும் அதற்காய் அவன் ஒரு ஊரையே நடந்து முடித்து சோர்ந்துபோகும் காட்சியும் ஒருவகையில் நாடகத்தனமான முடிவாகவே இருப்பினும் அதுவே யதார்த்தமாகவும் இருக்கிறது. ஒரேயொரு கொழுக்கட்டைக்காக விடுதியை விட்டு ஊருக்குள் நுழையும் சிறுவனின் சித்திரம் பலரால் நம்பமுடியாதது. ஆனால் ஒரு அமுக்கப்பட்ட மனிதனின் பசியும் ஏக்கமும் இப்படித்தான் அலைக்கழிக்கும். திருக்கார்த்திகை அன்று நாகர்கோவில் வட்டாரத்தில் அவிக்கப்படும் பனை ஓலைக் கொழுக்கட்டைக்காக ஒரு பாலன் அலைந்து திரியும் வேளையில் தானே, சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்தும் இருந்தனர். ஒளிஏற்றி வெளிச்சம் பரப்பிய அந்நாளில் அதேவழியாக நடந்துபோன ஒரு சிவத்தை பட்டினியோடு கைவிட்ட இருள் அந்தக் கதைமுடிவில் வாசகனுக்கு தெரிந்துவிடுகிறது.
ராம் தங்கத்தின் கதைகளிலிருக்கும் பிரதேசத்தன்மை, தொன்ம வழிபாடுகள் பற்றிய விவரிப்புகள் அவதானிக்கப்படவேண்டியவை. குறிப்பாக அவருடைய கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு உள்ளக முரண்களை, சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சுயசாதிக்குள் உருவாகும் “பெரியண்ணன்” போட்டிகளை என எல்லாவற்றையும் புனைவின் கலைநேர்த்தி பெருமளவில் குன்றாமல் எழுதிவிடுகிறார். ஒருவன் தனது வட்டாரத்தன்மையை காவு கொடுத்து உலகத்தரம் பெறவேண்டுமென்று அவசியமில்லை என்பதை ராம் தங்கம் அறிந்திருக்கிறார். ஒவ்வொரு கதையிலும் வருகிற உரையாடல்கள் நிலத்தின் வாசனையோடு நிகழ்ந்திருக்கிறது.
ஊழிற்பெருவலி என்றொரு சிறுகதையில் வருகிற பெண்ணின் கடந்தகாலமும் நிகழ்காலமும் வாழ்விற்கும் தற்கொலைக்குமான தன்மைகளோடு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற கதைகள் நிறையவே நமக்கு வாசிக்ககிடைக்கும். ஆனால் ஊரினால் பலாத்காரம் செய்யப்பட்ட ஒருத்தியின் குரலை இந்தக் கதைக்கு முன்னர் வேறு எந்தக்கதை பதிவு பண்ணிற்று என்று யோசிக்குமளவு இது முக்கியமானது.
பானி என்றொரு சிறுகதை. ராம் தங்கத்தின் மிக முக்கியமான சிறுகதையாக இதனையும் “கடந்துபோகும்” என்றொரு கதையினையும் சொல்லமுடியும். ராம் தங்கத்தின் கதைகள் விளிம்புநிலையில் வாழும் மனிதர்களையே பேசுகிறது. ஆனால் எங்கும் குரல் உயர்ந்து கோஷமாய் மாறவில்லை. உலகிற்கு உபதேசம் செய்விக்க எண்ணவில்லை. மனித இன்னல்களை வாழ்வின் களத்திலிருந்து நேரே தரிசிக்கிறார். ஒரு லத்தீன் அமெரிக்க சிறுகதையைப் போல, ஒரு மேற்கத்திய சிறுகதையைப் போல எழுதிப்பார்க்க எண்ணும் குளறுபடியான சிக்கல்கள் இந்தத் தொகுப்பை பொறுத்தவரை ராம் தங்கத்திற்கு நேரவில்லை. இனியும் நேர்ந்துவிடாது தன்னை அவர் பாதுகாக்கவேண்டும். மிக அருமையான அசலான சிறுகதைத் தொகுப்பை தமிழ் மொழி பெற்றிருக்கிறது. அன்பு முத்தம் ராம் தங்கம்.
– அகர முதல்வன்