3-3-2024 அன்று மதுரை பதிப்பு, தினமலர் நாளிதழில் வெளிவந்த நேர்காணல்.
நாஞ்சில் மண்ணின் இளம் எழுத்தாளரான ராம் தங்கம் தமிழின் குறிப்பிடதக்க எழுத்தாளராக உருவெடுத்துள்ளார். பல்வேறு இதழ்களில் பணிபுரிந்த இவர் இப்போது முழு நேர எழுத்தாளர். இவரது சிறுகதைத் தொகுப்பான ‘திருக்கார்த்தியல்’ 2023ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது பெற்றுள்ளது. காந்திராமன், ஊர்சுற்றிப் பறவை, கடவுளின் தேசத்தில், ராஜவனம், புலிக்குத்தி, வாரணம் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது நேர்காணல்….
* எழுத்தாளராகும் முன் இருந்த நூல் படிப்பு அனுபவம்?
சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில். தொலைதுார படிப்பு மூலம் பட்டம் பெற்றேன். என் பாட்டி நாளிதழ்கள், வார இதழ்கள் படிப்பார். எனக்கும் வாசிப்பு தொற்றி கொண்டது. கிடைத்த எல்லாவற்றையும் வாசித்தேன். புத்தகக் கண்காட்சிகளுக்கு புத்தகங்களை வாங்கி படித்தேன். நுாலகங்களில் புத்தகங்களை இரவல் வாங்கி பஸ் பயணத்தின் போது படிப்பேன்.
* முதல் புத்தகம் பற்றி?
2014 முதல் எழுத துவங்கினேன். கன்னியாகுமரி வரலாறு, மண்ணின் சிறப்பு பற்றி ஊர்சுற்றிப் பறவை என பெயர் வைத்து புத்தகம் எழுதி கொண்டே இருந்தேன். பொதுவாக கோயில் நுழைவு போராட்டம் என்றால் வைக்கம் போராட்டத்தை சொல்லுவர். ஆனால் அதற்கு முன்பே சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் பெரிய போராட்டத்திற்கான ஆயத்தம் நடந்தது. இதில் காந்திராமன் செயல்பட்டிருந்தார். அவர் பணக்காரராக இருந்து காந்திய வாழ்க்கைக்காக சிறை சென்று, சுதந்திரத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என தெரிந்தது. ஊர்சுற்றி பறவை எழுத நினைத்து இறுதியாக காந்திராமன் பற்றிய வரலாறு புத்தகமே என் முதல் புத்தகமாக 2015ல் வெளியானது. பின் ஊர் சுற்றிப் பறவை, மீனவ வீரனுக்கு ஒரு கோயில் என அடுத்தடுத்த படைப்புகளை எழுதினேன்.
* முழு நேர எழுத்தாளரானது எப்படி?
இதழியல் பணியை செய்து கொண்டிருந்த நான், ஒரு கட்டத்தில் வெளியேறினேன். அந்த நேரத்தில் எழுத்தாளர் முகில் நட்பு கிடைத்தது. அவர் எழுத்தின் மூலம் சம்பாதிக்க வழி ஏற்படுத்தி கொடுத்தார். திரைப்படங்கள், கண்டெண்ட் ரைட்டிங் என எழுத்து பணியில் அவரோடு என்னை இணைத்து கொண்டார். திருக்கார்த்தியல் புத்தகத்தை வாசித்து விட்டு பிச்சைக்காரன் பட இயக்குனர் சசி, 4 சிறுகதை எடுத்து ஆந்தாலஜி செய்வதாக கூறினார். இவை எனக்கு உத்வேகம் அளித்து எழுத செய்கின்றன.
* யுவ புரஸ்கார் விருது கிடைத்தது பற்றி?
திருக்கார்த்தியல் எனும் சிறுகதையை வார இதழில் எழுதினேன். இது வாசகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதற்கு பிறகு நிறைய சிறுகதைகள் எழுதி 11 கதைகள் அடங்கிய தொகுப்பாக வெளியிட்டேன். இந்த சிறுகதைத் தொகுப்பு சுஜாதா அறக்கட்டளை, அசோகமித்ரன் விருது, படைப்பு இலக்கிய விருது, அன்றில் விருது உள்ளிட்ட 6 விருதுகளை பெற்றது. பலமுறை யுவ புரஸ்கார் விருது இறுதி பட்டியலில் இடம் பெற்றிருந்தது. 2023ம் ஆண்டிற்கான யுவ புரஸ்கார் விருதும் பெற்று தந்தது.
* நாஞ்சில் மண்ணிற்கே மீண்டும் மீண்டும் யுவ புரஸ்கார் கிடைப்பது பற்றி?
மலர்வதி, அபிலாஷ் என்ற இரு எழுத்தாளர்களுக்கு ஏற்கெனவே யுவ புரஸ்கார் விருது கிடைத்துள்ளது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் எனக்கு விருது கிடைத்துள்ளது. தென் பகுதிக்கு தான் எழுத்து என்ற நிலை மாறி தற்போது பரவலாக்கப்பட்டு வருகிறது. தமிழ் இலக்கியத்தில் அதிகமாக எழுதப்பட்டது கன்னியாகுமரி நிலம் தான்.
* நீங்களே ஒரு ஊர் சுற்றி பறவை தானோ?
ஆம். இலக்கியம் வாசிப்பதால் எனக்கு பயணம் ருசித்தது. புதிய நில பரப்பில் வாழ்வதற்கும், அப்பகுதி மக்கள் வாழ்வியலை பார்ப்பதற்கும் நான் எழுதுவது உறுதுணையாக உள்ளது. இதனால் நானே பயணம் செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்கிறேன்.
* இன்றைய இளம் எழுத்தாளர்களின் வரவில் தேக்க நிலை உள்ளதா?
தேக்கநிலை கிடையாது. அதிகமான இளைஞர்கள், வாழ்வியல் சார்ந்த மண் சார்ந்த கதைகளை எடுத்து கொண்டு வர வேண்டும் என நினைக்கிறேன். காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் வல்லமையை தமிழ் பெற்றுள்ளது. தற்போது வட்டார வழக்குகளையும் உள்ளடக்கிய படைப்புகளை எதிர்பார்த்து காத்துள்ளது. நிறைய படைப்புகள் வந்து கொண்டும் இருக்கின்றன. இளைஞர்கள் இன்னும் அதிகம் செய்ய வேண்டும்.