செல்லக்கருப்பி

செல்லக்கருப்பி!
  சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டும் என்கிற பட்டியலில் இருந்த நாவல் செல்லக் கருப்பி. அதற்குக் காரணம் ‘ பனியோடு வீசும் இளம் குளிர் காற்றைத் தவிர மழை வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. கரும்பச்சை தமிழாய் கவிழ்ந்து கிடந்தன தேயிலைக் குன்றுகள்’ என புத்தக அட்டையில் இருந்த இந்த வரிகள் தான். ஏற்கனவே பி. எச். டேனியேல் எழுதிய எரியும் பனிக்காடு நாவலின் தாக்கம் இப்போது வரைக்கும் உண்டு. டி. செல்வராஜ் எழுதிய தேநீர் நாவலை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தேயிலைத் தோட்டங்களைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் மூன்றாவது நாவல் இது என்று நினைக்கிறேன்.
 தேயிலைத் தோட்டங்களுக்குள்ளே இருக்கும் எளிய மக்களின் கதை. தோட்டத் தொழிலாளர்களின்  வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கையை எழுத்துக்கள் மூலம் பிரதிபலித்துள்ளார் அல்லி பாத்திமா. மூடுபனி மூடியிருக்கும் தேயிலைத் தளிர்களுக்கு நடுவே,  கவாத்து செய்யப்பட்ட தேயிலை மரங்களுக்கு இடையில் ரத்தத்தை உரியும் அட்டைப் பூச்சிகள் போல எஸ்டேட்  நிர்வாகத்தினரின் அடக்குமுறையும் உழைப்பு சுரண்டலும் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
             
  தேயிலைத் தோட்டத் தொழிலாளி செல்லக்கருப்பி தான் கதையின் மையம். அவளை சுற்றும் காதல், பிரிவு, சோகம் போராட்ட குணம் எல்லாம் சேர்ந்து தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளுக்காக, ஊதிய உயர்வுக்காக போராடி அவள் தலைவியாக மாறுவதாக நாவல் முடிகிறது. எந்த இடத்திலும் ஒரு கட்சி சார்ந்த விஷயங்கள் இல்லாமல் கதை அதன் போக்கிலேயே பயணிக்கிறது. பொதுவாக ஆண் தலைமை உருவாகும் விதத்தைப் பார்த்திருக்கும் வேளையில் ஒரு பெண் தலைமை உருவாகி வருவது நாவல் வாசிக்க வாசிக்க வரவேற்கும் விதமாக இருக்கிறது. மூடுபனி பற்றி, தேயிலைத் தோட்ட வெயில் பற்றி, இரவின் நிறம் பற்றி, தேயிலைத் தளிர் பற்றி எழுத்தாளர் வர்ணிக்கும் வர்ணனைகள் கவிதை. நல்ல நாவல் நண்பர்கள் வாசிக்கலாம்.
செல்லக் கருப்பி
அல்லி பாத்திமா
எழுத்து பிரசுரம் ( ஜீரோ டிகிரி)
பக்கங்கள்: 235
விலை: 280

About the author

ramthangam

Add comment

By ramthangam