குங்குமம் இதழ் நேர்காணல்

குங்குமம் 14-7-2023 இதழில் வெளிவந்த நேர்காணல். நேர்காணல் செய்தவர் பேராச்சி கண்ணன்

சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது நாகர்கோவில் இளம் எழுத்தாளர் ராம் தங்கத்திற்குக் கிடைத்திருக்கிறது. அவரின் ‘திருக்கார்த்தியல்’ சிறுகதைத் தொகுப்பிற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளாகவே சாகித்ய அகடமியின் இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற நூல்தான். ஆனால், இந்தாண்டே ராம் தங்கத்தின் வசமாகியிருக்கிறது யுவபுரஸ்கார்.

 ‘என் ‘திருக்கார்த்தியல்’ தொகுப்புக்கு யுவபுரஸ்கார் விருது கிடைக்கும்னு நான் நம்பினதைவிட இதை படிச்சவங்க நம்பினாங்க. நீங்க படிச்சாலும்கூட விருது கொடுத்தது சரிதான்னு நம்பிக்கையை உருவாக்கும். ஏன்னா, அந்தக் கதைகளும் அதன் களங்களும் அப்படியானது. நான் முதல்ல எழுத வரும்போது விருதுகள் வாங்கணும்னு எல்லாம் தோணவேயில்ல. நான் எழுதுகிற கதைகளை வாசகர்கள் ஏத்துப்பாங்களானு ஒரு தயக்கமும், பயமும்தான் இருந்துச்சு.

ஆனா, இந்தத் தொகுப்பைப் படிச்சிட்டு ஒவ்வொரு வாசகர்களும் பாராட்டினப்பதான் நம்பிக்கையே வந்தது. படிக்கிற எல்லோருமே இதுக்கு விருது கிடைக்கும்னு சொன்னாங்க. அந்த விஷயம் இப்ப நடந்திருக்கு’’ என்றவரிடம், எழுத வேண்டும் என்கிற உள்ளுணர்வு எப்படி வந்தது? என்றோம். ‘‘என் சொந்தஊர் நாகர்கோவில். வாசிப்புப் பழக்கம் சின்ன வயசுலயே இருந்தது. பள்ளிப் பாடப்புத்தகங்கள் தாண்டி வாரஇதழ் வாசிப்பதற்கான சூழல் இருந்தது. வாசிக்கிறோம்னு தெரியாமலேயே வாசிப்பு எனக்குள் ஊடுருவியது.

 இதற்குக் காரணம் என்னை சுத்தி இருக்கிறவங்களும் படிச்சிட்டு இருந்தாங்க. என் தலைமுறைக்கு முந்தைய தலைமுறையிலேயே கல்வி போய் இருந்ததும் ஒரு காரணம். பிறகு இலக்கியம்னா என்னனு தெரிஞ்சு வாசிச்சேன். புத்தகங்கள் படிக்கிற பழக்கம் தினகரன் பத்திரிகையில் வேலை செய்திட்டு இருந்தப்ப வந்தது. 2010க்குப் பிறகுனு நினைக்கிறேன். அப்ப தினமும் செய்தித்தாள்கள் வாசிக்கணும். இதழ்கள் வாசிக்கணும்னு ஒரு விஷயம் ஏற்பட்டுச்சு. இதுதவிர, சூரியன் பதிப்பகப் புத்தகங்கள் எல்லாம் வாசிக்கிற சூழல் உருவாச்சு.

 பிறகு ஒருஊர்ல இன்னொரு ஊருக்குப் போறப்ப பஸ் பயணத்துல வாசிக்கிற பழக்கம் வந்தது. ஒரு கிராமப்புற நூலகத்துல இருந்து போய் ஒருபுத்தகத்தை எடுத்து படிச்சதும் இன்னொரு கிராமப்புற நூலகத்துக்குப் போய் வேறொரு புத்தகம் எடுத்து படிக்கிறதுமா இருந்தேன். நாகர்கோவில் மாவட்ட மைய நூலகத்துல நான் சேர்வதற்கான முயற்சியில் ஈடுபட்டேன். ஆனா, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்கள் சொல்லி அலைக்கழிச்சாங்க. அப்பதான் நாம் ஒரு புத்தகம் எழுதினா அந்தப் புத்தகம் இந்த நூலகத்துக்கு வரணும்னு எண்ணம் உருவாச்சு.

அப்புறம், ஏன் நூலகங்கள் போகணும்… நாமே நமக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிக்கலாமேனு சிறுக சிறுக பணம் சேமித்து நூல்கள் வாங்கினேன். இதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வருவேன். இப்ப 2 ஆயிரம் புத்தகங்கள் சேகரிச்சு வச்சிருக்கேன். நான் வாசித்து முடித்த புத்தகங்களை பள்ளிக்களுக்கோ, நண்பர்களுக்கோ கொடுக்குறேன். இதன்மூலம் வாசிப்பு பழக்கத்தையும் உருவாக்கிட்டு வர்றேன்’’ என்றவர், தொடர்ந்தார்.

 ‘‘முதல்ல எங்க ஊர் கன்னியாகுமரி பற்றி எழுதணும்னு தோணுச்சு. இவ்வளவு சுற்றுலாத்தளங்கள், வரலாற்று இடங்கள் உள்ளதை சொல்லணும்னு நினைச்சேன். பயணக்கட்டுரை மாதிரி. அதுக்கான தகவல்களைத் திரட்டிட்டு இருக்கிறப்ப தியாகி காந்திராமன் பற்றி தெரியவந்துச்சு.

அவர் வைக்கம் போராட்டத்துல பெரியாருடன் இணைந்து போராடியவர். சுசீந்திரம் கோயில் நுழைவு போராட்டத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைக்கிற போராட்டத்திலும் முக்கிய தலைவராக செயல்பட்டிருக்கார். அவரைப் பற்றின தகவல்கள் கேட்கக் கேட்க சுவாரஸ்யமாக, அந்தத் தகவல்களைச் சேகரிச்சு எழுதினேன். அப்படியாக ‘காந்திராமன்’ புத்தகம் வந்தது. முதல்ல எழுதத் தொடங்கினது ‘ஊர்சுற்றிப் பறவை’ நூல்தான். ஆனா, அதை ரெண்டாவதே எழுதி முடிக்க முடிஞ்சது.

அப்ப, ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’னு எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீ மொழிபெயர்த்த நூலை படிச்சிட்டு அவங்ககிட்ட பேசினேன்.  அப்ப அவங்க திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்தைப் பற்றி பேசினாங்க. நானும், ‘எங்க ஊர்ல மருத்துவாழ் மலைனு இருக்கு. அங்க கார்த்திகை அன்னைக்குத் தீபம் ஏற்றுவாங்க. நாங்க அதைத் திருகார்த்தியல்’னு சொல்வோம்னு சொன்னேன். அப்ப ஊர்ல கொழுக்கொட்டை செய்றது உள்ளிட்ட பல விஷயங்கள் பேசினேன். அவங்கதான், ‘இதுல ஓர் அழுத்தமான கதை இருக்கு. எழுதுங்க’னு உற்சாகப்படுத்தினாங்க.

இதன்பிறகு நாமும் சிறுகதை எழுதலாம்னு தோணுச்சு. ஆனா, நம்மால் நம்மால் எழுத முடியுமானு ஒரு எண்ணமும் வந்தது. வரலாற்றைத் தேடி எழுதுறோம். ஆனா புனைவாக கதைகளை எப்படி உருவாக்க முடியும்னு ஒரு எண்ணம்.  பிறகு நம்பிக்கையாக என் முதல் சிறுகதையான ‘திருக்கார்த்தியல்’ எழுதினேன். அது ஆனந்த விகடன்ல வெளியாகி பரவலான வாசகர்களின் கவனத்தைப் பெற்றது. நிறைய பேரின் பாராட்டுகள் கிடைக்க இன்னும் எழுதணும்னு உற்சாகத்தைத் தந்தது. 2019ம் ஆண்டு மட்டும் ‘திருக்கார்த்தியல்’ தொகுப்புக்கு ஆறுவிருதுகள் கிடைச்சது.

நான் எப்பவும் கடுமையான நெருக்கடிக் கொடுக்கக்கூடிய போட்டியாளராகவே என்னை நிறுத்திக்கிறேன். அதுமாதிரி விண்ணப்பிக்க வேண்டிய எல்லா விருதுகளுக்கும் நான் விண்ணப்பிச்சிடுவேன். யுவபுரஸ்கார் விருதுக்கும் 2019ல் 2023 வரை 5 ஆண்டுகள் விண்ணப்பிச்சேன். ஒவ்வொரு ஆண்டும் கிடைக்காம்ப் போகும்போது நான் சோர்ந்துபோகல. விண்ணப்பிச்சிட்டே இருந்தேன். அப்படியாக இப்ப கிடைச்சிருக்கு.

 பிறகு, ‘ராஜவனம்’ என்கிற புத்தகம் கொண்டு வந்தேன். அது அச்சுப் போவதற்கு முன்பே சிங்கப்பூர் மாயா இலக்கிய வட்டம் குறுநாவல் போட்டியில் முதல்பரிசு பெற்றது. அப்புறம், விஜயா வாசகர் வட்டம் வழங்கும் கவிஞர் மீரா விருதும் இந்நூலுக்குக் கிடைச்சது. அதன்பிறகு, ‘புலிக்குத்தி’ என்கிற சிறுகதைத் தொகுப்பு கொண்டு வந்தேன். இதற்கு சௌமா இலக்கிய விருதும், படைப்பு இலக்கிய குழும விருதும் கிடைச்சது. தொடர்ந்து இன்னைக்கு வரை எழுதிக்கிட்டேதான் இருக்கேன். எவ்வளவு விருது கிடைச்சாலும் அது நம்மை சோர்வடைய வச்சிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கேன்.

 விருதுகளையும் ஒரு பீரோவில் பூட்டியே வச்சிருக்கேன். காரணம், இந்த விருதை பார்க்க பார்க்க நாம் சாதிச்சிட்டோம் என்கிற எண்ணம் தலைக்குள் வந்திடக்கூடாதுனுதான். அதனால, ஒவ்வொருமுறை எழுதும்போதும் அது முதல்கதை என்பதுபோலவே நினைச்சு எழுதுறேன்’’ என்றவரிடம் அடுத்து என்றோம்.  

‘‘இப்ப, ‘ராஜவனம்’ நாவலின் இரண்டாம் பாகம் எழுதிட்டு இருக்கேன். இது வாசகர்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. இன்னும் கொஞ்சம் பெரிசாக போயிருக்கலாம்னு சொல்லியிருந்தாங்க. அதை இன்னொரு கதைகளமாக மாற்றி எழுதிட்டு இருக்கேன். அப்புறம், கன்னியாகுமரி நிலம் சார்ந்தும் ஐம்பது ஆண்டுகள் பண்பாடு, கலாச்சாரம் சார்ந்தும் இருந்த மக்களை மையமாக வச்சு ஒரு நாவல் எழுதிட்டு இருக்கேன். கூடவே பயணக்கட்டுரைகளும் எழுதிட்டு வர்றேன். இதைத்தவிர்த்து சில நண்பர்களுடன் சேர்ந்து திரைக்கதையும் எழுதுறேன்’’ என உற்சாகமாக சொன்னார் ராம் தங்கம்.

About the author

ramthangam

Add comment

By ramthangam