பயணங்கள் பல வகை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இலக்கு என்பதும் செல்லும் பாதை என்பதும் நிச்சயம் இருக்கும். ஆனால் எழுத்தாளர்களுக்கு அது பொருந்தாது. காட்டாற்று வெள்ளம் போல அவர்கள் பயணங்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அந்தவகையில் தான் சென்று வந்த பயணத்தைப் பதிவு செய்த விதம் அற்புதம். வெறும் பயணக் கட்டுரை புத்தகம் அல்ல இது. ஒவ்வொரு இடங்களையும், அதனுடைய வரலாறுகளையும் விவரிக்கிறது இந்தப் புத்தகம்.
அது மட்டுமல்ல. இந்த பயணம் முழுவதும் இவருடன் சாமானிய மனிதர்கள் தான் பயணிக்கிறார்கள். குறிப்பாக ஆட்டோ நண்பர்களும் இவருக்குமான நெருக்கம் சிறப்பு. மூணாறில் இருந்து உற்சாகத்துடன் ஆரம்பிக்கிற பயணம், மறையூர், வைக்கம், வாகமன், கீழ் கோதையாறு ,அடிமாலி ,தோட்டமலை ,திருவனந்தபுரம் ,மய்யழி வழியாக நகர்ந்து எழுத்தாளர் எம். முகுந்தன் அவர்களின் வீட்டு முற்றத்தில் முடிகிறது. பயணம் முடியும் போது பல இடங்களை சுற்றி பார்த்ததோடு ஒவ்வொரு இடங்களிலும், நன்மை தீமைகளையும் ஊர்களின் வரலாறுகளையும் அறிந்து கொள்ள முடிகிறது .
கீழ் கோதையாறுப் பயண அனுபவத்தை வாசித்தால் நிச்சயம் நீரில் மாட்டி உயிர் இழக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை குறையும். கோதையாறு போகும் ஒவ்வொரு இளைஞர்களும் அந்த கீழ் கோதையாறு பயணக் கட்டுரையை வாசித்துவிட்டு போவது நல்லது. ஒவ்வொரு கட்டுரை பற்றியும் விரிவாக எழுதலாம் அந்த அளவு தகவல் நிறைந்தது வாசித்து பாருங்கள்.
திருவனந்தபுரம் பயணக் கட்டுரையில், தமிழ்நாடு பேருந்துகள் வெளியே நிறுத்தப்படும் வருத்தத்தை பதிவு செய்துள்ளார். எங்கே பயணித்தாலும் நம் மண்ணையும், தமிழர்களின் உணர்வையும் சுமந்து செல்லும் ஒரு படைப்பாளி என்பது வாசித்து முடிந்ததும் உணர்வு தட்டும். வைக்கம் பகுதியில் பெரியாரும் கோயில் நுழைவுப் போராட்டமும் நமக்கு நினைவு வரும். அதைத் தாண்டி அங்கு என்னவெல்லாம் ஸ்பெஷலாக இருக்கிறது. அங்கேப் போனதும் இவர் நினைக்கு வரும் விஷயம் பிரமிப்பாக இருக்கிறது.
மய்யழி ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் அவர் நம்மையும் அங்கே அழைத்து சென்று எழுத்து ஆளுமை எம். முகுந்தன் அவர்களின் வீட்டின் முற்றத்தில் அனாதையாக விட்டு விட்டு மறைந்து விடுகிறார். மிக விரைவாக, எளிதாக வாசிக்கும் எழுத்து. வாசித்து முடிந்ததும் ஒரு பயணம் நிச்சயம் போகத் தோன்றும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
– ரா. ராகுல் சே