இந்த நோயச்ச காலத்தில் வெளியூர் பயணங்கள் செல்வது வாய்ப்பில்லை ,அந்த ஏக்கத்தை செறிவான பயண கட்டுரைகளை வாசிப்பதன் மூலம் கொஞ்சம் தீர்த்துக்கொள்ள முடிகிறது .
ராம் தங்கம் அவர்களின் “கடவுளின் தேசத்தில்” கேரள பயணக் கட்டுரைகள் மிகச்சிறப்பான வாசிப்பனுபவத்தை தருகிறது. எளிமையான நடை, அதே நேரத்தில் காட்சிகளை கண் முன்னே நிறுத்தும் விவரணைகள். நில காட்சி விவரணைகள், அந்த இடத்தின் வரலாற்று பின்புலம், சுவாரஸ்யமான சம்பவங்கள் என எல்லா வகையிலும் சிறந்த கட்டுரைகளை இடைவெளி இல்லாமல் வாசிக்க முடிகிறது. சில வாகமன் ,திருவனந்தபுரம் தவிர , அதிகம் பரிச்சயம் இல்லாத இடங்களைப் பற்றி மிக விரிவாக எழுதியிருப்பது சிறப்பு.
மறையூர் முனியறைகள் ,வைக்கம், வாகமன் , கீழ்கோதையாறு , அடிமாலி , தோட்டமலை ,திருவனந்தபுரம் பயணம் , மாஹி ரயில் பயணம் மற்றும் மாஹி என ஒவ்வொரு இடத்தின் சிறப்புகளையும் , வரலாறுகளையும் அறிந்துகொள்ள முடிகிறது , பச்சைப் போர்த்திய புல்வெளிகள் , ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரைகள் என ஓவ்வொரு காட்சியும் நம் கண் முன்னே விரிகிறது.
தோட்டமலை கட்டுரையில் காணி பழங்குடிகளை பற்றி நிறைய தகவல்களை எழுதியிருக்கிறார். அவர்களின் வாழ்க்கைமுறை , அவர்களுக்கு காணி பழங்குடிகள் என எப்படி பெயர் வந்தது என்பது வரை நுண் தகவல்களை தருகிறார் ,கட்டுரைகள் வெறும் தகவல்களாக இல்லாமல் உணர்வு பூர்வமாகவும் இருப்பது அருமை .
“மய்யழி கரையோரம் ” நாவலை வாசித்த எல்லோருக்கும் கற்பனையில் பார்த்த மாஹியை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆவல் நிச்சயம் இருக்கும் , அப்படி சென்று பார்த்த மாஹியின் அனுபவங்களையும் , அந்த நாவலை எழுதிய எம்.முகுந்தன் அவர்களை சந்தித்த அனுபவத்தை பற்றியும் மாஹி பயண கட்டுரையில் வாசிக்கலாம் .
இன்னும் நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் புத்தகத்தில் இருக்கிறது , உடனே கட்டுரையில் இருக்கும் இடங்களை நேரில் சென்று பார்க்கவேண்டும் என்ற ஆசை வெகுவாக எழுகிறது , காலம் எப்போது அனுமதிக்கும் என்பது விடையில்லாத கேள்வி.
– பாலசுப்ரமணியன் மூர்த்தி