‘கடவுளின் தேசத்தில்’ விமர்சனம் – சுனிதா கணேஷ் குமார்

இயற்கைச் சூழல் நிரம்பிய ரம்மியமான கேரள மாநிலத்தின் இயற்கையை “கடவுளின் தேசம்” என்று கூறுவது மிகையல்ல. இன்றைய உலகில் மனிதன் சதா தன் தேவைகளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்போது, இயற்கை என்னும் கடவுளை மறந்து போய்தான் இருக்கிறான்.. இந்த நூலின் ஆசிரியர் ராம் தங்கம் விவரிக்கும் மலைச்சரிவுகளையும், தேயிலை தோட்டங்களையும், மலையின் இடுக்குகளில் தவழும் மேக கூட்டங்களையும், சாரல் மழையையும் ரசிக்க வேண்டும் என்ற ஆவல் எழாமல் வாசகன் இந்தப் புத்தகத்தைக் கடந்து விட முடியாது.

எழுத்தாளரின் எளிமையான வரிகள் வாசிப்பின் வேகத்தை உற்சாகப்படுத்துகின்றன. அதேபோலத் தான் பயணம் செய்து கடந்து வந்த இடங்களையும் அனுபவத்தினையும் மிக அழகாக பதிந்துள்ளார்..வெறும் இடங்கள் பற்றிய குறிப்புகள் மட்டும் அல்லாது இயற்கையின் அழிவுகளுக்குக் காரணமாக இருக்கும் மணல் திருட்டு, மலைகளை அழித்து உருவாகும் கல்குவாரிகள், மலைப்பகுதிகளில் இறைந்து கிடக்கும் மது பாட்டில்கள் பீங்கான்கள் போன்றவற்றைக் குறித்து தன்னுடைய வருத்தத்தையும் பதிவு செய்கிறார்.. மனிதச் சுயநலத்தின் காரணமாக அழிந்துபோகும் இயற்கையின் விளைவை நாம் ஒரு நாளில் சந்தித்தே தீர வேண்டும்.

அதோடு மட்டுமில்லாமல் மலைப்பகுதிகளில் சீண்டுவாரற்று கிடக்கும் பழங்குடியினத்தவரின் மேம்பாட்டுக் கட்டிடம் பற்றியும் அவ்வூரில் பத்தாம் வகுப்புவரை படித்த செல்வி என்பவர் அங்குள்ள பழங்குடியின மக்களுக்குக் கற்பித்ததைப் பற்றியும் ஆனால் அங்கே பள்ளிக்கூடம் வந்த பிறகு அவர் வேலைவாய்ப்பை இழந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார்.. பேருந்து நிலையங்களில் காணப்படும் சுகாதாரமற்ற கழிவறைகளைப் பற்றியும் தொடர்ந்து சுட்டிக்காட்டிக் கொண்டே வருகிறார்.

படம் எடுத்து ரப்பர் தோட்டத்தை இழந்த ராஜாமணி அவருடைய தோட்டத்திலேயே கூலியாய் போன பரிதாப நிலையைப் பற்றியும், பெயிண்டராக வேலை செய்து கொண்டே மனப்பிறழ்வு ஏற்பட்டவருக்குச் சேவை செய்து வரும் தன் நண்பரைப் பற்றியும் மற்றும் அவருடைய பயணத்தில் சந்தித்த எழுத்தாளர்களையும், நண்பர்களையும், அரவுகளுடைய உதவி மற்றும் உபசரிப்புகளையும் பதிவு செய்திருக்கிறார்.

இந்த நூலின் மூலம் மன்னர் விக்கிரமாதித்யன் வரகுணன் காலத்தில் திருநந்திக்கரை குடவரை கோவில் உருவாக்கம் பெற்றதைப் பற்றியும், இந்தியாவின் தென்பகுதியில் சமணம் பரவியதில்  திருநந்திக்கரையின் பங்கு பற்றியும் தகவல்களை அறிய முடிகிறது. திருநந்திக்கரை மகாதேவனின் கோவிலின் சிறப்பினையும் வரலாற்றையும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “தோட்ட மலை” பற்றியும் அங்குள்ள “காணி மக்கள்” பற்றியும் அவர்களின் வாழ்க்கை முறைகள், உணவு வகைகள், தொழில் மற்றும் விவசாயம் போன்ற விவரங்களும் தரப்பட்டுள்ளது. “மூணாறு” இயற்கை எழிலையும், அங்கே தேயிலைத் தோட்டம் உருவான கதை, அங்கே ஆட்சி செய்தவர்கள், மூணாறு செல்லும் மலைப்பாதைகள் பற்றிய விவரிப்பு, அணைக்கட்டுகள், தேயிலை வணிகம் ஏற்றுமதிக்காக ஏற்படுத்தப்பட்ட “ரயில் போக்குவரத்து” இப்படிச் செய்திகள் ஏராளம்.

“மறையூரின்” சிறப்புகள் அவ்வூர் தொடர்பான இதிகாச கதைகள் மறையூர் வெல்லம், மறையூர் சந்தனக் கட்டை ஏலம், சமணப்படுகைகள், வட்டெழுத்துக்கள் போன்ற வரலாற்று தகவல்களும், பேச்சிப்பாறை அணை குறித்த தகவல்களும், துறைமுகங்கள், அருவிகள், வாகமன் பைன் மரங்கள், தலச்சேரி பிரியாணி இவை அனைத்தைப் பற்றியும் தகவல்கள் நிறைந்த ஒரு புத்தகம்.

மறந்துபோன வரலாற்றினை மீட்டெடுக்கும் ஒரு கருவியாக இதுபோன்ற பயணக் கட்டுரைகள் அமைந்துவிடுகின்றன. எழுத்தாளர் குறிப்பிட்டிருக்கும் இடங்களினைப் பற்றிய வரலாற்று குறிப்புகள் நம்முடைய பயணம் செய்யும் நோக்கத்தை (வெறுமனே இடங்களைக் கண்டு வருவது) மாற்றியமைக்கிறது.

பதிப்பகம் :வானவில் வெளியீடு

மொத்தப் பக்கங்கள்: 152

விலை: ரூ 188

 

 

About the author

ramthangam

Add comment

By ramthangam