ராம் தங்கம் அவர்கள், தனது கேரள பயணங்களை “கடவுளின் தேசத்தில்” என்று எழுதியதன் தொடர்ச்சி இப்புத்தகம். ஒரே புத்தகமாக வந்திருக்க வேண்டியதாம். எழுத நேரமின்மையால் இரண்டாவது பாகமாக வெளியிட்ட தொகுப்பு இது. தலச்சேரி, கோட்டயம், ஃபோர்ட் கொச்சி, மூணார் பயணங்கள் பற்றிய தொகுப்பு.
தலச்சேரி கேக் வகைகள் மற்றும் தம் பிரியாணிக்கு புகழ்பெற்ற ஊராம். அதுவும் பாரிஸ் ஹோட்டல் பிரியாணி மிகவும் பிரபலமாம். பாரிஸ் ஓட்டலே ஒரு சுற்றுலா மையம் போல இருக்கிறது அவரது வர்ணனையில். தொடர்ந்து, தலச்சேரியின் வரலாறு, போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர் வருகை எல்லாம் விவரித்து விட்டு,
ஆங்கிலேயர்களின் ஏற்றுமதிப் பொருட்களை வைக்கும் கிடங்கு-ஆக பயன்பட்ட சதுர வடிவத் தலச்சேரி கோட்டையை காட்ட அழைத்துப்போகிறார். அதன்பின், மொழிபெயர்ப்பாளர் ஷபியுடன் ஒரு சந்திப்பு.
கோட்டயம் – எழுத்துகளின் நகரம் முதல் மலையாள அச்சகம் நிறைவப்பட்ட ஊர். நிறைய எழுத்தாளர்களைத் தந்த ஊர். கோவில்கள், தேவாலயங்கள், பறவைகள் சரணாலயம் என பல சுற்றுலாத் தளங்களைக் கொண்ட ஊர். கோட்டயத்தில் “நிலம் பூத்து மலர்ந்த நாள்” எழுதிய மனோஜ் குரூர் அவர்களை சந்திக்கிறார். அவருடனான உரையாடலில், ஜாதிப் பெயரைச் சேர்த்து எழுதுவது, தற்போதைய மாற்றங்கள் பற்றியெல்லாம் பேசியதையும் குறிப்பிட்டுள்ளார்.
ஃபோர்ட் கொச்சி – இந்தியாவில் முதல் காலனித்துவ கோட்டை கட்டப்பட்ட இடம். மூன்று ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தில் இருந்த ஊர். இவர்கள் போக அராபியர், யூதர், சீனர் என வணிகர்களும் தொடர்பிலிருந்த ஊர். கொச்சியில் இருக்கும் மட்டஞ்சேரி டச்சு அரண்மனையின் வரலாறு, 450 ஆண்டுகள் கடந்து நிற்கும் பாரடைஸ் தேவாலயம், யூதத் தெரு, இந்தியாவின் முதல் போர்ச்சுகீசிய தேவாலயமான செயிண்ட் பிரான்சிஸ் தேவாலயம், அங்கிருக்கும் வாஸ்கோடகாமாவின் கல்லறை, டச்சுக்களின் கல்லறைத் தோட்டம், 13-ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்று கொச்சியின் அடையாளமாக ஆகியிருக்கும் சீன வலைகள் (அட்டைப்படம்) என ஒவ்வொன்றாய் விவரித்தரிப்பது நாமே கொச்சியைச் சுற்றி வந்தது போல் உணர வைக்கிறது.
மூணார் – தேயிலைத் தோட்டங்களின் இடையில் வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளைப் படங்களில் பார்க்கையில் கண்கள் விரியும். அடர்ந்த வனமாக இருந்த கண்ணன் தேவன், அண்ணாமலை, பீர்மேடு மலைகள் இன்று தேயிலைத் தோட்டங்களான வரலாறை அறிந்தால், பிரமிப்பு விலகி வருத்தம் வரும். மூணாரில் தேயிலையின் வரலாறு, தொழில் பற்றிய தகவல்கள் அங்குள்ள தேயிலை அருங்காட்சியகத்தில் தெரிந்து கொள்ளலாம். போதமேடு வ்யூ பாயிண்ட், வரையாடுகளின் சரணாலயமான இரவிகுளம் தேசிய பூங்கா, ஆனைமுடி சிகரம், டாப் ஸ்டேஷன், எக்கோ பாயிண்ட், கேரளத்திற்குத் தேவையான பழங்கள், காய்கறிகளின் பெரும்பங்கை வழங்கும் வட்டவடா கிராமம் என சுற்றி வந்து அழகாக விவரித்துள்ளார். ரயில்பாதை இல்லாத இடுக்கி மாவட்டத்தில், 1924-ல் ரயில் நிலையம், ரயில் எல்லாம் இருந்திருக்கிறது. அது தான் டாப் ஸ்டேஷன். மூணாரிலிருந்து கொடைக்கானல் வரக் கூட பாதை இருந்திருக்கிறது என்ற தகவல் ஆச்சரியம் தருகிறது.
“கடவுளின் தேசத்தில்” புத்தகம், அருமையான பயணநூல். இடங்களின் பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றையும் விவரித்து, அழகையும் வர்ணத்திருப்பது வாசிக்க சுவாரசியம் கூட்டுகிறது.
– ராஜேஸ்வரி லெஷ்மணன்
கடவுளின் தேசத்தில் (பாகம் 2) – ராம் தங்கம்
அமேசான் கிண்டில் வெளியீடு