‘இலக்கியக் காட்டாற்றில் நெடுந்தூரம் நீந்த வேண்டும்’ – {குமுதம் இணையதளத்தில் 2023 ஜூலை 7ஆம் தேதி வெளி வந்த நேர்காணல்}
யுவபுரஸ்கார்’ விருது கிடைத்துவிட்டதே என தேங்கிவிடக்கூடாது. இதன் மூலமாக இன்னும் கொஞ்சம் கவனம் பெற்றிருக்கிறேன், அவ்வளவே. ‘யுவபுரஸ்கார்’ விருது கிடைத்துவிட்டதே என தேங்கிவிடக்கூடாது. இதன் மூலமாக இன்னும் கொஞ்சம் கவனம் பெற்றிருக்கிறேன், அவ்வளவே. தமிழ் எழுத்துலகில் வாய்ப்புக்கள் பெரிது. அதை நோக்கியதுதான் என் பயணம்” – தீர்க்கமாகச் சொல்லும் எழுத்தாளர் ராம் தங்கம், தன் கதைகளின் வழியாகக் கனமான உணர்வுகளையும், வலியையும் வாசகனுக்குள் அப்படியே கடத்தும் வித்தைக்காரர். இவரது ‘திருக்கார்த்தியல்’ சிறுகதைத் தொகுப்புக்கு, 2023 ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் ‘யுவபுரஸ்கார் விருது’ அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ராம் தங்கத்திற்கு வாழ்த்துச் சொல்லிப் பேசினோம். மகுடத்தை தலையில் ஏந்தாத சலனமில்லாத அமைதியான அவரது பேச்சு அத்தனை அழகு. விருது குறித்த கேள்வியிலிருந்தே பேச்சு தொடங்கியது.
‘யுவ புரஸ்கார்’ விருது உங்களுக்கு கிடைத்தது எப்படி இருக்கிறது?
“ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அடுத்து இன்னும் அதிகம் எழுதும் உந்துசக்தியைக் கொடுத்திருக்கிறது. நான் எப்போதும் போலவே இருக்கிறேன், எனக்குள் எந்த மாற்றமும் இல்லை. இந்த விருது நண்பர்கள், வாசகர்களுக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. அதனைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள், அன்பைப் பரிமாறுகிறார்கள். அந்த அன்புதான் எனக்குச் சந்தோஷம். இந்தப் புத்தகம் கவனம் பெறக் காரணமானவர்கள் வாசகர்கள் மட்டுமே. அவர்கள்தான் கதைகள் குறித்து பேசிக்கொண்டும், கருத்துகளை முன்வைத்துக் கொண்டும் இருந்தார்கள். எம் வாசகர்களுக்கு, எனது எழுத்தை நேசித்துப் பாராட்டிய, அங்கீகாரம் அளித்தவர்களுக்கு நன்றி. புத்தகத்தை வெளியிட்ட ’வம்சி’ பதிப்பகம், கே.வி.ஷைலஜா அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”
‘திருக்கார்த்தியல்’ புத்தகம் இதற்கு முன் என்னென்ன அங்கீகாரங்கள் பெற்றிருக்கிறது?
“தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இலக்கிய அமைப்புகள் மூலம் ஆறு இலக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறது. யுவ புரஸ்கார் ஏழாவது விருது. இத்தொகுப்பில் உள்ள ‘வெளிச்சம்’ என்கிற கதை, கல்லூரிப் பாடத்தில் இடம்பெற்றுள்ளது. பல முதுகலை மாணவர்கள் ஆய்வுக்களமாகவும் கையாண்டுள்ளனர். 2019ம் ஆண்டிலேயே, சிங்கப்பூர் அரசின் தேசிய நூலகத்தில் இப்புத்தகம் இடம்பெற்றுவிட்டது. இயக்குநர் சசி என்னுடைய கதைகளைப் படமாக்கும் முயற்சியில் இருக்கிறார்.”
குறைவான கதைகள் எழுதியிருந்தாலும், இலக்கிய உலகில் பெரும் கவனம் பெற்றுவிட்டீர்களே?
“23 கதைகளே எழுதியிருக்கிற மௌனி, எழுத்துலகில் தவிர்க்க முடியாதவர் அல்லவா? 10 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கும் நான், 20 சிறுகதைகள்தான் எழுதியிருக்கிறேன். ஒரு கதை என்றாலும், எழுத்தின் ஆழம் எப்படியிருக்கிறது? வாசகரை எப்படிச் சேர்கிறது என்பதே முக்கியம். எவ்வளவு எழுதுகிறோம் என்ற எண்ணிக்கை இதைத் தீர்மானிப்பதில்லை.”
ஆரம்பத்தில் வரலாறு, தொன்மம், ஆய்வு சார்ந்து எழுதிக் கொண்டிருந்த நீங்கள் புனைவு எழுத்துக்கு நகர்ந்தது எப்படி?
“நம் எல்லோருக்கும் பிறந்த ஊர் பிடிக்கும். அப்படித்தான் நான் குமரி மாவட்டம் பற்றித் தேடித் தேடிப் படித்தேன். ‘ராமன் என்கிற காந்திராமன்’ என்ற என் முதல் புத்தகம் எழுதப்பட்டது அந்தத் தேடலில்தான். கன்னியாகுமரி மாவட்ட வரலாற்று ஆவணமாக ‘ஊர் சுற்றிப் பறவை’, அங்குள்ள நாட்டார் தெய்வ வழிபாட்டைப் பற்றி ‘மீனவ வீரனுக்கு ஒரு கோயில்’ என அடுத்தடுத்து எழுத ஆர்வம்தான் காரணமாக இருந்தது. நாஞ்சில் நாடன், கே.வி.ஜெயஶ்ரீ ஆகியோர் என்னைக் கதை எழுதும்படி தூண்டினர். அப்படித்தான் சிறுகதைகள் எழுதினேன். நம்மிடமும், நம்மைச் சுற்றியும், நண்பர்கள், வாழும் இடம், பார்க்கும் மனிதர்கள்… என கதைக்கான கருக்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதனை ஆர்வத்தோடு, சரியாக எழுதுகையில் அது தனக்கான இடத்தை அடைகிறது. புனைவு எழுத்துக்கு வாசகர் பரப்பு அதிகமாக இருக்கிறது.”
மூத்த இலக்கியவாதிகளின் செல்லப்பிள்ளையாக எப்படி நீங்கள்… இருக்கிறீர்கள்>
“அப்படிச் சொல்ல முடியாது. நாம் எப்படிப் பழகுகிறோமோ அப்படித்தான் அவர்களும் பழகுவார்கள். உங்களிடமும் அவர்கள் அதே அன்பைக் காட்டுவார்கள். பரந்துபட்ட வெளியை நாம் அவர்களிடத்தில் உணர முடியும். நான் நாகர்கோயில்காரன் என்பது கொஞ்சம் வசதியாகிவிட்டது. பொன்னீலன், நாஞ்சில் நாடன், அ.கா.பெருமாள் ஆகியோரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பும், பல விஷயங்கள் குறித்துப் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. எழுத்தைத் தாண்டி அவர்களிடம் நிறைய கற்றுக்கொள்கிறேன்.”
பொன்னீலனுக்கும் உங்களுக்குமான அன்பு.. எப்படியானது?
“பொதுவாகவே எல்லோரிடமும் அன்பு பாராட்டுபவர் அவர். அப்படித்தான் என் மீதும் இருக்கிறார். அவரது மனைவி கனி அம்மாள், மகள்கள் அழகுநிலா, அனிதா, பேத்திகள் பிரியதர்ஷினி, திவ்யா, நிவி முதல் அவரது கொள்ளுப்பேரன் நீல் வரைக்கும் என் மீது அன்பு செலுத்துகிறார்கள். எனக்குப் பிறந்தநாள் என்றால் கேக் வெட்டி, புது ஆடைகள் வாங்கித் தந்து கொண்டாடுவதும் அவர்கள்தான். அவரது குடும்பத்தில் நானும் ஒருவன் என்றுதான் சொல்வார்கள். அவர்கள் அன்பைப் பெற்றதில் மகிழ்ச்சி.”
கன்னியாகுமரிக்கும், இலக்கியத்திற்கும் அப்படி என்ன பந்தம்?
“காலம்காலமாகவே எழுதிவரும், எழுதப்பட்டு வரும் நிலம் இது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியச் சொல்லாடல்கள், இப்போதும் குமரி மக்களின் பேச்சு வழக்கில் உள்ளன. திருவள்ளுவர் இங்கு பிறந்ததாக ஆய்வுகள் சொல்கின்றன. தமிழ்ப்பாட்டி அவ்வையாரை வழிபடும் வழக்கம் காலங்காலமாக இங்குதான் இருக்கிறது. அந்த பந்தம் தொடரத்தானே செய்யும். அது, கவிமணி, சதாவதானி செய்குதம்பி பாவலர், சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, ஹெப்சிபா ஜேசுதாசன்.. என பல தலைமுறைகளாகக் கடந்து இப்போது வரை தொடருகிறது. இன்னும் பலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பலர் எழுத வருவார்கள்.”
அடிக்கடி கேரளா சென்றுவிடுகிறீர்களே..?
“பயணம் எனக்கு எப்போதும் பிடித்தமானது. அதிலும் கேரளா கொஞ்சம் ஸ்பெஷல். இன்றுதான் அது, கேரளம். ஆதி காலத்தில் அது, ‘சேர நாடு’, தமிழர்கள் வாழ்ந்த நாடு. மலையாளம் பின்புதானே வந்தது. காலம் காலமாக பண்பாட்டு மற்றும் பழக்கவழக்கங்கள் ரீதியாக கன்னியாகுமரி மக்கள் கேரளாவோடு தொடர்பு கொண்டிருந்தார்கள். அந்த மாநிலத்தின் அழகு என்னை வசீகரிக்கிறது. சாப்பாடு, படகுப்பயணம், மனிதர்கள், இலக்கியவாதிகள்.. என என்னை ஈர்க்கும் விஷயங்கள் அதிகம். அங்கு சந்திக்கும் மனிதர்கள், நாம் எழுத்தாளர் என்றால் மகிழ்கின்றனர். கொடுங்கல்லூர் கண்ணகி, சிவன் கோயில்களுக்கும் செல்வேன். யூதர், பிரிட்டிஷ், பிரெஞ்சுக்காரர்களின் கலாசார மிச்சங்கள், வரலாற்றோடு தொடர்புடைய இடங்கள் அங்குள்ளன. நான் தெரிந்துகொள்வதற்கான விஷயங்களும், எழுதுவதற்கான விஷயங்களும் அங்கு கிடைக்கிறது. இன்னும் நான் பார்க்க வேண்டிய, தெரிந்துகொள்ள வேண்டிய இடங்கள் ஏராளம் இருக்கின்றன. அதனால் அடிக்கடி கேரளா செல்கிறேன்.”
சமூக ஊடகங்களில் அதிகம் இயங்குகிறீர்களே..?
“உலகையே இணைத்திருக்கிறது இணையம். காலத்தின் மாற்றம் சார்ந்து இயங்குவது அவசியம். எல்லோரும் தத்தமது பக்கங்களை எழுதிட அவை வாய்ப்பைத் தருகின்றன. சமூக ஊடகங்கள் எழுத்தாளருக்கும், வாசகருக்குமான இடைவெளியைக் குறைத்து, அணுக்கத்தை அதிகரிக்கின்றன. முன்பெல்லாம் ஒரு எழுத்தாளருக்குக் கடிதம் அனுப்புவதே சிரமம் என்ற நிலையில், இன்று என் எழுத்தை வரவேற்பதும், விமர்சிப்பதும் ஒரு பின்னூட்டத்தில் எளிது.”
அடுத்து எழுதிக் கொண்டிருப்பது..?
“சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட இருக்கிறேன். ‘ராஜவனம்’ பாகம் 2, கன்னியாகுமரியின் தொன்மையான வரலாற்றைச் சொல்லும் ஒரு நாவல், பயணக்கட்டுரைகள்.. என எழுத வேண்டியவை நிறைய இருக்கிறது. இலக்கியம் என்பது காட்டாறு போல்தான். அந்த காட்டாற்று வெள்ளத்தில், நெடுந்தூரம் நீந்த வேண்டுமென்பதே என் விருப்பம்.”
– சி.எம். ஆதவன்