உலகில் நாம் எங்கே சுற்றித்திரிந்தாலும் திரும்பி வந்து நம் வீட்டில் கால்களைக் கீழே கிடத்தி உறங்குவது பெரும் இன்பம். எவ்வளவுதான் நகர வாழ்க்கையில் இருந்தாலும் நம் தாய் வீடான நம் காட்டிற்குச் செல்லும் பொழுது ஆதிகாலத்தை உணர்ந்தது போல் ஆகும் அந்த உணர்வைக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு வார்த்தைகளின் மூலமாகவும் எழுத்துக்களின் மூலமாகவும் யானைக் கூட்டங்களுடனும் பறவைக் கூட்டங்களுடனும் விலங்குகளுடனும் பயணிக்க முடிந்தது. மலைகளில் தண்ணீருக்காகப் போர் போடக்கூடாது, வனத்தில் உள்ள மரங்களில் உள்ள கனிகளை அதிகம் பறித்து உண்ணக்கூடாது, எந்த இடத்தில் காலணி இல்லாமல் செல்ல வேண்டும், என்ற விவரங்கள் அதிகம் உண்டு.
கதையின் ஹீரோ வழக்குரைஞர் மன்றோ. அவரது மாமா சாமர்வெல். பொதிகை மலையின் பின்பகுதியில் இருக்கும் சில்மர் எஸ்டேட்டில் அவரைக் காணச் செல்கிறான் மன்றோ. வனத்தை சுற்றிப் பார்க்கும் ஆசை மன்றோவிற்கு வர அவரது மாமா வனச்சரகராக வேலை பார்க்கும் ராஜசேகரைப் பற்றி பெருமையாகக் கூறுகிறார். ராஜசேகர் உடன் வனத்தைச் சுற்றிப் பார்க்க மன்றோ வை அனுப்பி வைக்கிறார்.
ராஜசேகருடன் வனத்தைச் சுற்றி வந்து விலங்குகள், அருவிகள்,பாறைகள் பறவைகள், பூச்சி இனங்கள் பட்டாம்பூச்சி வகைகள் போன்றவற்றை ரசித்து வனத்தில் ஆழ்ந்து பயணிக்கிறான் மன்றோ. அதுமட்டுமல்ல முதன் முதலில் ராஜசேகருக்கு யானையின் மேல் அவ்வளவு அலாதி பிரியம் வந்தது எப்பொழுது முதன் முதலில் யானையைக் கண்டார் என்பது பற்றியும் விளக்கிக் கொண்டே வருகிறார்.
நடுவில் சாமர்வெல் தனக்கு முன்னோர்கள் வாழ்ந்த வாழ்வியல் போராட்டங்களை பற்றி நினைத்துப் பார்க்கிறார் மன்றோவிற்கு வைத்த பெயர்க் காரணத்தையும் அவருக்கு விளக்குகிறார். சாமர்வெல் அவர்களின் மூதாதையர். தாத்தாவினுடைய தந்தை தங்கை நாடார் அவரின் பூர்வீகம் அதங்கோடு. மீட் என்ற வெள்ளைக்காரிடம் மாட்டுவண்டி ஓட்டுபவராக வேலைக்குச் சேர்கிறார். அவருடைய மனைவி ஜோகன்னா. மேலாடை இல்லாத பெண்களுக்கு உடுப்பளித்து அவர்களது வாழ்வியலை முன்னேற்றுகிறார். இருவரும் தம்பதிகளாக இருந்து பல தடைகளைத் தாண்டி மக்களுக்கு விழிப்புணர்வும், நாகரீக வாழ்வியலையும் புகட்டுகின்றனர்.
டிரஸ் போடறதுல என்ன மேல் ஜாதி பெண் கீழ் சாதிப்பெண் பெண் என்றாலே பெண் தான் என்று குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடங்கள் கட்டுவது, சிறிய கிராமங்களுக்குத் தொடர்ச்சியாகச் சென்று பிரசங்கங்கள் செய்வது என்று பயணிக்கிறார். கூடவே தங்கையா நாடார் அவரது குடும்பமும் மீட் ஜோகன்னாவுக்கு உதவிகள் செய்து மக்களை நெறிப்படுத்த முயல்கின்றனர். நடுநடுவே நம்பூதிரிகளின் அரசியலும் அங்கு நடக்கும் அரசியல் விவகாரங்களையும், மதமாற்றங்கள் பற்றியும் விளக்கமாகக் கூறியிருக்கிறார் ஆசிரியர். ஜோகன்னா இறந்தபோது அவரை காண வந்த பெண்கள் கூட்டம் அவர் மேல் வைத்திருந்த அன்பு மரியாதை எல்லாம் நெகிழ்வாக இருந்தது.
எல்லாவற்றையுமே மறைக்கும் சக்தி இருளுக்கு இருக்கிறது. எல்லா நதிகளும் ஒன்று போல இல்லையே ஒவ்வொரு பகுதிக்கும் மாற்றங்கள் தெரிகிறது. அதுபோலத்தான் ஓடையின் தொடக்கம் முதல் முடிவு வரை ஒற்றைத் தன்மையோடு இருப்பதில்லை நதிகளைப் போல அவை மாற்றம் கொள்கின்றன அவற்றின் ஒரே பிடித்தம் நீர் மட்டும்தான். மலைகள் எப்போதும் ஆச்சரியத்தைக் கொடுப்பவை அது உடைக்கப்படாமல் இருக்கும் வரை ஒரு பெரிய பொக்கிஷமாகத் தெரிகிறது உடைத்து பெயர்த்தெடுத்தபின் திருடன் கொள்ளையடித்துச் சிதறிய வீடு போலத் தெரிகிறது. வனத்துக்குள் இருப்பதால் இந்த மலைகள் இன்னும் பாதுகாப்பாக இருப்பதாகத் தோன்றுகிறது, ஆனைய மலையா பாக்குறதும் வனமா பாக்குறதும் ஒன்றுதான்,என்ற வரிகள் எல்லாம் அருமையாக இருந்தது.
இந்த புத்தகத்தை வாசித்த அனைவருக்கும் ராஜசேகர் பிரியமானவராக இருப்பார் ஆனால் எனக்கு ராஜசேகரின் தந்தை சுடலை தான் பிடித்தமானவர். அவரிடமே யானைகளை மட்டுமல்ல அனைத்து விலங்குகளையும் உயிர்களையும் நேசிக்கக் கற்றுக்கொள்கிறார் ராஜசேகர். அதுமட்டுமல்லாது தன்னுடைய மகனையும் இதே துறையில் பயணிக்க வைக்க முயல்கிறார். ராஜசேகருக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் அவர்தான்.
மலையிலிருந்து இறங்கும் யானைகளுக்காக வாழை நட்டு வைப்பது யானைகளை இரவில் கண் விழித்து வெடியிலிருந்து பாதுகாப்பது என்று அவருக்கு யானையின் மீதான அன்பு மலைக்க வைத்தது. விலங்குகளும் நம்மோடு சேர்ந்த குடும்பம் தான் என்று உணர்ந்து வாழையை உண்ண வரும் யானை குட்டிக்கு ஐயப்பா என்று பெயரிட்டது. கடைசியில் அவருடைய தந்தை இறப்பிற்கு பின் அந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாறி வந்தது என்ற பகுதி விறுவிறுவென்று இருந்தது.
ஒரு கட்டத்தில் எந்த விலங்குகளைப் பற்றிக் கூறும் பொழுதும் பயப்படாத ராஜசேகர் செந்நாய்களைப் பற்றிக் கூறும் போது மட்டும் மன்றோ ராஜசேகர் இருவருமே பயந்து போனார்கள். ஆகா கதையில் செந்நாய் வந்துவிடுமோ என்ற பயத்தில் படித்துக் கொண்டே சென்ற எனக்கு அடுத்த வரிகளில் ராஜசேகர் இல்லை இந்த காட்டில் செந்நாய்க் கூட்டம் கிடையாது என்று ஆசுவாசப்படுத்துகிறார்.
வனத்தில் சுற்றித் திரியும் பொழுது பட்டாம்பூச்சி கூட்டங்களே விவரிக்கும் பொழுதும் விலங்குகளைப் பற்றிக் கூறும் பொழுதும் கிட்டத்தட்ட ஒரு அமைதியான மனநிலையை நாம் உணர்ந்து கொள்ள முடியும். இந்த புத்தகத்தில் கூறியது போல ஒரு வனத்தை நான் சுற்றிப் பார்க்க இயலுமா என்பது எனக்குத் தெரியாது ஆனால் அப்போது கிடைக்கும் அமைதி வாசிக்கும்போது கிடைத்தது.