‘ராஜவனம்’ மதிப்புரை – திவாகர். ஜெ


இயற்கை தன்னுள்ளே அளப்பரிய சித்திரங்களை சிப்பிக்குள் முத்தாய் மறைத்து வைத்துள்ளது. நாம் தான் கண்ணிருந்தும் குருடராய் அவற்றையெல்லாம் நின்று நிதானிக்கும் பொறுமையற்றவராய் கண்டும், காணாதது போல் கடந்து சென்று விடுகிறோம். ஆனால், தானுணர்ந்த, அணுவணுவாய் ரசித்த கானகத்தின் அழகியலை அலுப்பின்றி இந்நூலில் பருகத் தந்திருக்கிறார் ஆசிரியர் ராம் தங்கம் அவர்கள். 

 நூலின் அட்டைப்படமொன்றே போதும் நம் சிந்தையைக் கவர. அத்தனை நேர்த்தியாய் வடிவமைத்திருக்கிறார்கள். அட்டைப் படத்தினை வடிவமைத்தவருக்கு முதலில் ஒரு பெரிய கைத்தட்டல். ஓராயிரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வுகளையும் ஒரு ஓவியம் உணர்த்திவிடும். அவ்வகையில் நாவலின் முழுமையையும் இந்நூலின் அட்டைப்படம் தன்னுள் பொதிந்து வைத்துள்ளது.                 

 நந்தியாற்றின் நதிமூலம் காண புறப்படும் நண்பர்கள் மூவரோடு நான்காவதாய் ஓராள் பின் தொடர்ந்து வருவதை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நான்காமவர் நாம் தான். ஆம். கான்வெண்ட் ஜங்ஷன் பஸ் ஸ்டாப்பிலிருந்து கோபால், ராஜேஷ், ஆன்றோ மூவரும் இரு வண்டிகளில் புறப்படும் போதே நாமும் அவர்களோடு பின்னிருக்கையில் அமர்ந்து கொள்கிறோம். அடுத்து காட்டுப்பாதையில் அவர்கள் நடந்து பயணிக்கையில் நாமும் நடக்கிறோம். அவர்கள் பழங்களை உண்கையில் நாமும் உண்டு, ஒற்றை யானையைக் கண்டு அஞ்சி விலகி நடக்கையில் நாமும் விலகி நடந்து, கிளிகள், வண்ணத்துப் பூச்சிகள், பலவகை வன உயிரிகளைக் கண்டு ரசிக்கையில் நாமும் ரசித்து அவற்றோடு செல்பியும் எடுக்கிறோம். கோபாலின் மீது புலி தன் கால்களை வைத்து அமுக்கும் போது நம் தலைக்கு மேலே புலி நிற்பதை போன்றதொரு பிரமை.  தன் எழுத்துகளால் நம்மையும் தன் நண்பர்களோடு ஒருவராய் கட்டிப்போடும் வசீகர நடை ராம் தங்கம் அவர்களோடையது. வாழ்த்துகள் நண்பரே.

 கோபாலின் தந்தை கதாபாத்திரமாக வரும் ராஜசேகர் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறார். அதே நேரம் நேர்மையாளர்களை இச்சமூகம் வாழவிடாவிட்டாலும், எளியவர்களின் உள்ளங்களில் அவர்கள் என்றென்றைக்கும் அணையா தீபமாய் சுடர்விட்டுக் கொண்டுதான் இருப்பார்கள் என்பதையும் காலம் உணர்த்திக் கொண்டே தான் இருக்கிறது.                   தான் சொல்ல வந்த விசயத்தை கட்டாயப்படுத்தி நம் எண்ணங்களில் திணிப்பது ஒரு வகை. அதிகம் மெனக்கெடாமல் தன் வார்த்தைகளின் வழியே நம் மனத்தில் தீராத வடுவை ஏற்படுத்திச் செல்வது மற்றொரு வகை. ராஜவனம் இதில் இரண்டாவது பிரிவு. ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே வாசித்து விடக்கூடிய நாவல் தான். ஆனால், நேரில் சென்று கண்டதைப் போல பல பசுமை நினைவுகளையும், இயற்கை மீதான நம் பிணைப்புச் சங்கிலி அறுந்துவிடாமல் காக்க வேண்டுமென்ற எண்ணத்தினை வலிமையாய் நம் உள்ளத்தில் பதிய வைப்பதிலும் இந்நூல் மிளிர்கிறது.            
பத்தாண்டுகளுக்கு முன் கேட்ட நாகர்கோவில்காரர்களின் பேச்சினை இந்நூல் வழியே மீண்டும் என்னுள் கேட்க வைத்த ராம் தங்கம் அவர்களுக்கு தனியே ஒரு நன்றி.  இயற்கைக் காதலர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் – ராஜவனம். 
வாசிப்பும், பகிர்வும்

About the author

ramthangam

Add comment

By ramthangam