ராஜவனம் – சக்தி பிரகாஷ்

நாஞ்சில் நாட்டு வனத்தை நம் கண் முன்னே கொண்டுவந்து காட்டுகிறது இந்தப் புத்தகம். நந்தியாறு , முகளியடி மலையில் உற்பத்தியாகிறது.மலையின் அடர்ந்த காட்டில் உற்பத்தியாகும் இந்த ஆற்றின் மூலத்தைக் காண ராஜேஷ் , கோபால் மற்றும் ஆன்றோ  கிளம்புகிறார்கள் . பயணம் நெடுக அவர்கள் காணும் காட்சியே இந்தப் புத்தகம்.

வனத்திற்குள் செல்லும்போது அவர்கள் பார்த்த தவிட்டுக்குருவி கூட்டம் ,  காட்டுமாடு , நாகணவாயன் , குரங்குகள் , மான்கள் , காட்டுத் தேள் என ஒவ்வொன்றைப் பற்றியும் விவரிப்பது மிக சுவாரசியமாக இருக்கிறது. காட்டுக்குள் செல்லும்போது  பாதுகாப்புக்கு எடுத்துச் சென்ற அரிவாளால் தேவையில்லாமல் எந்த செடியையும் வெட்டாமல் நடந்து செல்வதைப் படிக்கும் போது நம் உள்ளம் நெகிழ்கிறது. மூங்கிலரிசி , சோலைமந்தி, சிறுத்தை என பலவற்றைப் பற்றி அரிய தகவல்களைச் சொல்லிச்செல்கிறார் ஆசிரியர் . பழங்குடி மக்களின் வனதெய்வ நம்பிக்கை நம்மையும் ஆட்கொள்கிறது .

பறவைகள், பூச்சிகள், பூக்கள் என ஒன்றுவிடாமல் விளக்குவது அருமை. கோபால் புலியை நேராக சந்தித்தது நம்மையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது . கோபாலின் தந்தை ராஜசேகர் வனஅலுவலராக இருந்த போது அவர் பணியில் சந்தித்த அனுபவங்கள் நம்மை வியப்புக்குள்ளாக்கியது. வனத்தை நேசித்த வன அலுவலரான  அவருக்கு நேர்ந்த இன்னல்களும், யானையைக் காப்பாற்ற அவர் படும் கஷ்டங்களும் , யானைகளுடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது . மின்வேலி அமைப்பது விலங்குகளுக்கு எவ்வாறு இடையூறாக இருக்கிறது என்பதை நம்மால் உணர  முடிகிறது .

கோபால், ராஜேஷ் மற்றும் ஆன்றோவுடன் நாமும் வனத்திற்குள் சென்று வந்த நிறைவைத் தருகிறது இந்தப் புத்தகம் . வனத்திற்குள் செல்ல விரும்பும் மக்கள் இந்த புத்தகத்தை ஒரு முறையாவது படித்து விட்டு சென்றால் அங்கே நாம் கவனிக்க வேண்டியவற்றை அறிந்து கொள்ளலாம் . இயற்கை விரும்பிகள் அனைவரும் படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம் இது.

– சக்தி பிரகாஷ்

About the author

ramthangam

Add comment

By ramthangam