வாழ்க்கை என்பது சம்பவங்களின் கண்ணி. சம்பவங்களின் அடிநாதம் உணர்வுகளும், அதன் வழியான சொற்களும்தான். சொல்லை சரியாக நிர்வகிப்பவன் படைப்பாளியாகிறான். அவனின் படைப்புகள் நம்மை ஆள்கிறது என்றால் அது மிகையிவ்லை. காலத்தையும் பண்பாடுகளையும் விழிகளாகவும் எண்ண வேண்டும்.
இது போன்ற சில கருதுகோள்களோடு உள்ள இளம் படைப்பாளிகளில் ஒருவர் ராம் தங்கம். அவர் இதுவரை 11 நூல்களைப் படைத்துள்ளார். பயணக்கட்டுரை, நாட்டார் வழக்காற்றியல், நாவல் , மொழிபெயர்ப்பு மற்றும் சிறுகதைத் தொகுப்பு என பல தளங்களில் இறங்குகிறார். அது, கவனிக்கத் தக்க பரிமாணம். சமீபத்தில் , அவரின் ‘புலிக்குத்தி’. சிறுகதைத் தொகுப்பு வெளியானது. ஒன்பது கதைகள் உள்ள புத்தகம்.
புலிக்குத்தி வெளியீடு VamsiBooks தோழர் Bavachelladurai Bava மற்றும் Shylaja Vamsi அவர்களின் நிறுவனம்! கதையின் அமைப்பு திரைக்கதைக்கு ஒப்பாக உள்ளது. உடைகளென்றாலும், வீடுகள் என்றாலும் அதனை அக்கு வேறு ஆணிவேறாக மிகவும் விசாலமாக விவரிக்கிறார். உணர்வுகளைக் கண்ணெதிரே கொணர்கிறார். எளிய மனிதர்கள், எளிய வார்த்தைகள் படைப்பின் உன்னதம். அதனை அநாசயமாகக் கடக்கிறார். ஒரே வாசிப்பில் புத்தகத்தை கடப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், அது சாத்தியமாகிறது.
பஞ்சு மிட்டாயும் பால்ராஜ் அண்ணணும் கதை. அந்த மிட்டாய் விற்பவர், நாம் சாயங்காலம் நம் வீட்டின் முன் நடமாடுகிறாரா என கவனிக்கும் வண்ணம் எண்ணம் எழுகிறது. பஞ்சு மிட்டாய் செய் முறையும் சரி, அதே சமயம் பன்றியை அறுக்கும் முறை பற்றியும் சரி, படு விவரமாகச் சொல்கிறார். கடைசியில் நம்மை ஏங்க வைக்கிறார். அக்கதையில் உணவு செய்முறையும் கூட வருகிறது.
தலைப்புக் கதை புலிக்குத்தி , சாமான்யர்களின் களவு வாழ்க்கையையும், நடு கல்லைப் பற்றியும் வரும் ஒரு வரலாற்றுக் கதையைப் போல் செல்கிறது. திரைப்படமாக வாய்ப்பான ஒரு சமூக வரலாறு. இவருக்கு ஒரு வேளை வாய்க்கலாம். பனங்காட்டு இசக்கி கதையும் நாட்டார் கடவுளுக்கு இட்டுச்செல்கிறது.
கம்யூனிஸ்ட் கதை , ஒரு பகுதியில் அந்த இயக்கம் வளர்ந்தது பற்றிச் சொல்கிறது. விளவங்கோடு பற்றிய அரசியல் செய்தியையும் அதனோடு இணைப்பது ஆசிரியரின் உன்னதமாகிறது.
சாதிவாக்கு , இன்றைய உள்ளாட்சி தேர்தலையொட்டி வாசிக்கையில், பல தொகுதிகளின் முடிவு எப்படி எந்த அடிப்படையில் அமையப் போகிறது என்பதை கட்டியம் கூறுகிறது. நன்றாக அலசியுள்ளார்.
அடைக்கலாபுரத்தில் இயேசு, நகைச்சுவையாகவும், நடைமுறையையொட்டியும் அமைந்துள்ளது. பழைய நினைவுகளைக் கொணர்கிறது. ஆனால், கடைசி இரண்டு பக்கங்கள் சட்டென முடிகிறது.
காத்திருப்பு கதை ஏக்கமோடு உள்ளது. அதில் எழுத்தாளர்களை நடமாட விடுவதும், கம்யூனிஸ்ட் கதையில் நிருபன் மற்றும் கௌரி என பெயர்கள் வருவதும் கதைகளுக்கு வலுவூட்டுவதோடு இயல்பாகவும் உள்ளது.
புத்தகத்தின் அட்டைப்பட நிறமும் அதன் பட வடிவாக்கமும் அருமை! எழுத்துக்களின் உரு வாசிக்க எளிதாக உள்ளது! வாழ்வின் பல்சுவைகளை குறிப்பிட்ட நிலப்பரப்பின் மீது அமைந்துள்ள இப்படைப்பு வாசகர்களைக் கவரும்! பல சங்கதிகளையும் படு விவரமாகச் சொல்ல ஆசிரியர் நிச்சயம் மெனக்கெட்டிருப்பார்! அது சோடை போகவில்லை!
– பொன்னம்பலம் காளிதாஸ் அசோக்