திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்பு 2019-ல், அசோகமித்ரன் விருது, சுஜாதா விருது, வடசென்னைத் தமிழ்ச்சங்கம் விருது, படைப்பு இலக்கிய விருது, சௌமா இலக்கிய விருது, அன்றில் இலக்கிய விருது என விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறது. தகுதியான சிறுகதைகள். கதைகள் நடக்குமிடம் எல்லாம் நாஞ்சில் பகுதிகள் தாம். மொத்தம் 11 கதைகள்.
விழிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை. செந்தமிழும், சிவாவும், அவன் பாட்டியும், சிந்திக்கிடக்கும் அரிசியைக் காலால் தள்ளி விடாமல் பையில் அள்ளித் தரும் லாரி டிரைவரும், டாக்டர் அக்காவும், லிங்கமும், வேலை செய்யும் இடத்தில் நேர்மையாய் இருக்கச் சொல்லித்தரும் அவன் பாட்டியும், இன்னும் கதையில் வரும் நிறைய பேர் நம்மோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், நாம் தான் அவர்களை கவனிப்பதில்லை, அக்கறைப் படுவதுமில்லை.
1. திருக்கார்த்தியல் – திருக்கார்த்திகையை, நாரோயிலில் (நாகர்கோவிலில்) அப்படித்தான் சொல்வோம். எங்கும் பனையோலைக் கொழுக்கட்டையும், தெறளியிலைக் கொழுக்கட்டையும் மணக்கும். செந்தமிழ், அம்மா இருந்தும், ஹாஸ்டலில் இருந்தான். அம்மா வருடம் ஒரு முறை மட்டுமே பார்க்கவருவாள். அன்று ஒரு மைசூர்பாகு மட்டும் தருவாள். அவனுக்கு ஏதேனும் தின்ன கிடைக்கிறதென்றால், மற்ற மாணவர்களைப் பார்க்க வருபவர்கள் கொண்டு வருவது தான். வார்டன் சமமாய் பங்கு வைத்துக் கொடுப்பார். இவனுக்குக் கொடுக்கும் போது, திங்க மட்டும் வருவதாய் திட்டுவார். பள்ளி செல்லும் வழியில், நெல்லிக்காயும், மாங்காவும் கொய்யாவும் திருடிக் கொண்டு வந்து உடனிருப்பவர்களுக்கு கொடுப்பது மாணவர்கள் மட்டுமர அறிந்தது. இது தவிர, அவனுக்கு வேறு தின்னக் கிடைக்கிறதென்றால், அது அவன் நண்பன் கொடுப்பது தான். ஊறுகாய், மீன்குழம்பு, தேங்காய், ஆட்டுக்கறி என ஏதாவது கொண்டு வருவான்.
திருக்கார்த்திகை நாள். பனவோலைக் கொழுக்கட்டை பற்றி தெரியவந்து, கொதியாகிவிட்டது செந்தமிழுக்கு. ஹாஸ்டலில் பொய் சொல்லிவிட்டு, மெதுவாய் ஊருக்குள் போகிறான். கடைசி வரை நடந்து, திரும்ப வருகிறான். அவன் நண்பன் “நாங்க திங்கும் போது யாரும் வந்தா அவியளுக்கும் கொழுக்கட்டை கொடுப்போம்” என்று சொன்னது போல் யாரும் தரவில்லை. அழுது கொண்டே, ஊரைச் சபித்தபடி ஹாஸ்டலை நோக்கி நடந்தான்.
2. டாக்டர் அக்கா – பாட்டியால் வளர்க்கப்படும் சிவாவிற்கு டாக்டர் அக்கா என்றால் ரொம்ப பிடிக்கும். அவர்களால், அவனும் பாட்டியும் நல்ல உடை உடுத்துகிறார்கள். அவனுக்கு நல்ல உணவு, சாக்லேட், புது நோட்டு-பென்சில், ஏன் கணக்கு டீச்சரிடம் அடி வாங்காமல் இருக்க, மெடிக்கல் சட்டிபிகேட் கூட கிடைக்கிறது. ஆனால், டாக்டரின் உணர்வுகளையே அசைத்துப் பார்த்தது அவனுடைய பிறப்பும், அவனறியா அவனது முந்தைய வாழ்க்கையும். ஒருவனை நம்பி ஏமாந்து போனவளை, அவன் சட்டத்துக்கு விரோத செயல்கள் செய்தானென்றாதாலேயே, காவல்துறையினரால் கொடுமைக்கும், வன்புணர்வுக்கும் ஆளாகி, சித்தம் கலங்கித் திரியும் தாயையும், டாக்டர் அக்காவையும் பிறகு அவன் பார்க்கவே இல்லை. அவனது கதை டாக்டர் அக்காவின் வாழ்க்கையையே மாற்றியதை அவன் அறியவேயில்லை.
3. முற்பகல் செய்யின் – நான்கு வருடத்திற்கு ஒரு முறை வீட்டில் ஒரு மரணம். எல்லோரும் அதை எதிர்பார்த்து தயாராகவே இருக்கும் மனநிலை. யார் என்பது மட்டும் தான் தெரியாது. இதன் பின்னால், மூதாதையரில் ஒருவர் சரியாக விசாரிக்காமல் கொடுத்த ஒரு தீர்ப்பு. இன்று மீதம் இருப்பது தாத்தாவும், பாரதியும் தான். பாரதியின் அப்பா இறந்து நான்காவது வருடம். ஊருக்கு வராதே என்று சொல்லியும் கேளாமல் வந்தே விட்டான் அவன்.
4. பெரியநாடார் வீடு – குலசேகரபாண்டியனின் வம்சாவளி வந்த பெரியநாடார், சில ஆண்டுகள் முன் வரை ஊரே கையெடுத்துக் கும்பிடும் நிலையில் இருந்தது. அவரது வீட்டுக்குள் திருடும் நினைப்போடு வருபவரே, உயிரோடு திரும்பமுடியாது. இப்பொழுது, அவரைக் கொல்லும் நோக்கிலேயே நிறைய முயற்சிகள். எல்லாவற்றுக்கும் காரணம் செல்லையா. பெரியநாடாரால், தான் வன்புணர்வு செய்த பெண்ணையே திருமணம் செய்யவேண்டி வந்த்தால் வந்த பகை. தீர்த்தாரா?
5. ஊழிற்பெருவேலி – காதல் என்ற பெயரில், ஒரு ஏமாற்றுக்காரனிடம் ஏமாந்து, பின் காவல்துறையினரால் கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் கதை.
6. வெளிச்சம் – லிங்கம் அப்பா இல்லாத பிள்ளை. படிக்க விருப்பம் இல்லாமல், வேலைக்குப் போகிறான். பாட்டியிடம் அதீத பிரியம். ஒவ்வொன்றாய் மாறி, கடைசியாய் ஒரு பேக்கரியில் வேலையில் நிலைக்கறான். சம்பளம், சாப்பாடு, நொறுக்குத்தீனி என குறையில்லாத வேலை. நீரிழிவு நோயால் கால் இழந்த பாட்டிக்கு இருக்கும் அண்டிப்பருப்பு ஆசையை அறிந்து, திருடிக்கொண்டு வருகிறான். பாட்டியோ, கையில் இருந்த பணம், பேப்பர் விற்ற பணம், கடன் என வாங்கி பணத்தைக் கொடுக்கச் சொல்லி, வறுமையிலும் நேர்மையாய் வாழக் கற்றுக்கொடுக்கிறாள்.
7. விரிசல் – ராஜூ மூத்தவன். சிக்குன் குனியாவால் சூம்பிப் போன கால்களுடையவன். அதற்கு முன்னால் மெடிக்கல் ரெப் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். இப்போது வேலை ஏதும் இல்லை. ஓவியம் வரைவது தான் இப்பொழுது நேரம் கொல்லும் ஒரே விசயம். உனக்கு முடிச்ச பிறகு தான் தம்பிக்கு என்று சொல்லிக் கொண்டிருந்த அம்மா, இப்போது இவனிடம் சொல்லாமலே தம்பிக்கு நிச்சயம் செய்துவிட்டாள். கேட்டால், வீட்டை விட்டும் போகச் சொல்லிவிட்டாள். அவனும் போய்விடுகிறான், சொல்லாமலே.
8. உடற்றும் பசி – சாராயம் காய்ச்சும் அப்பா வேலாயுதம் பிள்ளை, உதவும் அம்மா. போலீசால் பிடிபட்டு, தப்பிக்கையில், லாரியில் அடிபட்டு இறந்து போக, கருணை கொண்ட போலீஸ் ஒருவரால் ஒரு ஹாஸ்டலில் வைக்கப்பட்டு, பள்ளயிலும் சேர்க்கப்படுகிறான். எவ்வளவு சேட்டை செய்தாலும், படிப்பில் சரியாய் இருப்பதால், ஆசிரியர்கள் உதவியும், அனுதாபமும் கிடைக்கிறது. ஆனால், எட்டாம் வகுப்பில் ஸ்காலர்ஷிப் கிடைக்கவில்லை. அவன் ஒசந்த சாதி, அதனால்.
9. பானி – சுரேஷ், அம்மா-அப்போவோடு கன்னியாகுமரிக்குப் போன போது, கொஞ்சம் தண்ணியும், மாங்காயும், கொய்யாவும் கொடுக்க, பின்னாலயே வீடு வரை வந்துவிட்டான் பானி. பசியோ, தாகமோ, வலியோ எதுவானாலும் அவன் அது மட்டும் தான் சொல்வான். அவர்களோடயே வாழ ஆரம்பித்தான். ஊரே அறிந்து வைத்திருந்தது. ஊரினுள், திருட்டுகளும், வன்புணர்ந்து கொலையும் நடக்கிறது. பானியைக் காணவில்லை. பின்னொரு நாள் தெரியவந்தது, பாதி எரிந்து கிடைத்த பிணம் பானியோடது என்று. அவனை யார், ஏன் கொன்றார்கள்? சுரேஷுக்கு இப்பவும் அவன் குரல் கேட்பது போல் இருக்கிறது. (ராமேஸ்வரம், காசி எனத் தீர்த்தமாடிவிட்டு தங்கள் பழிபாவங்களைத் தொலைக்க மக்கள் கன்னியாகுமரிக்கும் வருகிறார்கள். வட இந்தியாவில் இருந்து வருபவர்கள் தங்கள் பாவங்களோடு, வீட்டில் உள்ள மனநோயாளிகளையும் இங்கே தொலைத்துவிட்டுச் செல்கிறார்கள். கன்னியாகுமரிக்கான ரயில் போக்குவரத்து வந்த பிறகுதான் மனநோயாளிகளின் வரத்தும் அதிகமானது.)
10. காணி வாத்தியார் – பெருஞ்சாணி அணைக்கட்டின் நீர்ப்பிடிப்புப்பகுதியில், தச்சமலைக்காடு, அதற்கும் சிறிது தள்ளி, தச்சமலை ஊர். போட்டில் தான் போகவேண்டும். அந்த ஊருக்கு கான்கிரீட் பள்ளிக்கட்டிடம் வரப் பாடுபடலட ஒரு அரசு ஆசிரியரின் கதை. ( ஒரிடத்தில், மலைகள் எல்லாம் கருங்கற்களாகவும், ஜல்லியாகவும், எம்சாண்ட் மண்ணுமாக மாறிக்கொண்டிருப்பதை எழுதியிருக்கிறார். இது இங்கே நாமக்கல் மாவட்டத்திலும் நடக்கிறது. “மேலே கோயிலைக் கட்டியதால் சிலது தப்பிச்சது என்று பேசிக்கோள்வோம். இப்போதோ, கோயிலின் தூணைக் கூட விட்டுவைக்க மாட்டேன் என்கிறார்கள்.)
11. கடந்துபோகும் – அம்மா இல்லாத வினோத், எட்டாம் வகுப்பு படிக்கும் போது, மாங்காய் பறிக்க செருப்பை வீச, அது பிடி மாஸ்டர் மேல் பட, திரும்பவும் பள்ளியை விட்டு விரட்டப்பட்டான். அதற்கு முன், ஒரு ஆசிரியையின் தலையிலிருந்த பூவை எடுத்ததற்காக. அப்போது குடிகார அப்பா பொது கழிவறைக்கு தண்ணீர் கொண்டு கொடுக்கும் வேலை. சுகந்தி டீச்சர் பார்த்து மீண்டும் பள்ளிக்கு போய், இப்போ ஜூஸ் கடையில் வேலை. அங்கே வரும் மாட்டிறைச்சிக்கடை முத்துக்குமார், 5ரூ டிப்ஸ் தருவார். ஒரு நாள் அவரது சூப் கடைக்கு வேலைக்கு கூப்பிட்டார். சம்பளம் அதிகம். முதல் நாளிலேயே, வேலை முதுகை வளைத்தது. சபீனாவும் தண்ணீரும் பட்டு கைகளும், காலும் ஊற, மாட்டின் குடல், கொழுப்புக் கழிவில் நிற்பதால், கால் அரித்துத் தோலும் உரிய, பாட்டி மண்ணெண்ணைத் தடவி விட்டால் தான், காலையில் கொஞ்சம் சுகம் தெரியும். நாள் போகப் போக, கை-கால் தோல் உரிய, அரிப்பும் அடங்கவில்லை. நடக்கவும், சாப்பிடவும் கஷடப்பட்டான். சூப் கடையிலிருப்பவர்களுக்குத் தெரிந்துவிட்டது, இனி இவன் ரொம்ப நாள் வேலைக்கு வரமாட்டான் என்று. கோளாறு சீக்கிரமே வந்துவிட்டதே. காலில் சீழ் வடிய வடிய, பாலிதீன் கவரைச் சுற்றிக்கொண்டு கப்புகளைக் கழுவினான். எல்லாம் முடிய பன்னிரண்டு மணியாகிவிட்டது. நிறைய வேலை. கூட 20ரூ கொடுத்தார் ஓனர். பஸ் இல்லை. அவனால் நடக்கவும் முடியவில்லை. ஊர்ந்து போகவும் வழியில்லை. கையிலும் புண். ஒரு வீட்டின் கேட்டில் சாய்ந்து உட்கார்ந்தான். தெருநாய்கள் அவனைச் சுற்றி நின்று குரைத்தன. அவனிடம் அவற்றை விரட்ட பலமில்லை. ஒரு நாய் அவன் காலை நக்கியது. இன்னொன்று அவன் சட்டையைக் கடித்தது. இப்போது அவன் அசையவேயில்லை.
கதைகளின் சாராம்சம் எழுதவேண்டாமென்று முதலில் தோன்றியது. ஆனால், எழுதினால் நிறைய பேர் வாசிக்கத் தூண்டும் என்பதால் எழுதிவிட்டேன். சாராம்சம் மட்டும் தான். கதைகளை வாசிக்கையில் தான் தெரியும், கதையின் போக்கில் உள்ளத்தை உலுக்கிவிடும், வாழ்க்கையில் நாம் உணரமுடியாத, வலிகளை, காட்சிகளை உணரவைக்கும்.
இயல்பான வட்டாரவழக்கு. கிண்டிலில் தரவிறக்கிவிட்டு, மேலோட்டமாய் பார்க்கையில் உற்சாகமாக இருந்தது. இப்படி பேசியவர்கள் தாம், வேலையின் காரணமான நாடோடி வாழ்க்கையில், இருக்குமிடத்து மக்களின் கிண்டலுக்கும், புரியாது விழித்தலுக்கும் பதிலாய், வார்த்தைகளை மாற்றிப் பேசி பழகிவிட்டோம். ஆர்வமாய் ஆரம்பிக்க, முதலாவதாய் வந்த செந்தமிழே மனதில் பாரத்தை ஏற்றி வைத்து விட்டான்.
ராம் தங்கம் அவர்களுக்கு வாழ்த்துகளும் வணக்கமும்.
– ராஜேஸ்வரி லெக்ஷ்மணன்