அன்புள்ள ராம் தங்கம் அவர்களுக்கு,
வாழ்த்துக்கள்.
திருகார்த்தியலை ஒரு வழியாக வாசித்து முடித்து விட்டேன். மேற்கொண்டு வாசிக்க முடியாமல் திணறிப் போன பல இடங்களும், மனிதர்களும் அதற்கு ஒரு காரணம். வாங்கி வந்த அன்றைக்கே கார்த்திக்கின் வாழ்க்கையைப் படித்ததாலோ என்னவோ மேற்கொண்டு நகரவே முடியவில்லை.ஒரு நாள் முழுதும் கார்த்திக் எங்கே போயிருப்பான், திரும்பி அவனைப் பார்ப்போமா, அடுத்த கதைகளில் வந்து விட மாட்டானா என்று என் மனமும் உடற்றத் தொடங்கியிருந்தது.
சரி, இதை கடந்து போய்விடுவோம் என்று வினோத்தின் வாழ்க்கைக்குள் வந்தால் கடந்தே போக முடியாமல் கண்ணீரில் கரைந்து, நீ ஏன்டா ஜூஸ் கடைய விட்டு போன? என்று எனக்குள்ளேயே கேள்விகளை கேட்கத் தொடங்கியிருந்தேன். டாக்டர் அக்காவை படித்த போது நான் அந்த பையனா, இல்லை அந்த டாக்டர் அக்காவா என்று ஏற்பட்ட குழம்பம் இப்போதும் நீடிக்கிறது.
செந்தமிழ் போல ஹாஸ்டலில் தங்கியிருந்த அனுபவம் எனக்கும் உண்டு. பானியைப் போல, காணி வாத்தியார் போல இப்போதும் பலரை நம்மால் காண இயலும், கண்டிருப்போம் என்றுதான் நினைக்கிறேன். வாழ்க்கையில் சுமதி என்ற பெயர் கொண்ட பலரைக் கடந்து வந்திருக்கிறேன். ஆனால், என்னை பாதித்தது இந்த சுமதி தான். நேற்று இரவு முழுதும் சுமதி தான் என்னை ஆட்க்கொண்டிருந்தாள். அவள் பேசிய ஒன்றயும் மறக்க முடியவில்லை. இவளைப் போல் இன்னும் எத்தனை சுமதிகள் இங்கு இருப்பார்கள்? அவ்வளவு எளிதில் கடந்து போய் விடக் கூடியதா அவர்களின் வலிகள்!!!
பசி ஒன்றுதான் வாழ்க்கையின் மிகப் பெரிய துன்பம், அதிலும் சிறு வயதின் பசி பெருங்கொடுமை. அவற்றை இவ்வளவு யதார்த்தமாக வெளிக் கொணர முடியுமா? என்று திக்கித்து விட்டேன். தானும் அவர்களில் ஒருவனாக மாறி போகாவிடில்
எளிய மக்களின் வலிகளை, வாழ்க்கையை அப்படியே கடத்துவது மிகச் சிரமம். கன்னியாகுமரி வட்டார வழக்கை மிகச் சிறப்பாக எடுத்து வந்திருக்கிறீர்கள். என்ன,எனக்கு தான் பல வார்த்தைகளும், அர்த்தங்களும் புதிதாக இருந்தது. இருமுறை படிக்க வேண்டியிருந்தது.
இன்னும் பல விருதுகள் உங்களை ஆளட்டும்.
அன்புடன்,
திவ்யா