உழைக்கும் சிறுவர்களின் துயர உலகம்
குழந்தைகளின் வசீகரமான உலகை எழுதிப்பார்க்கும் ஆர்வம் எல்லா படைப்பாளிகளிடமும் உண்டு. புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி தமிழின் சிறுகதை முன்னோடிகள் பலரும் குழந்தைகளின் உலகை கதைகளில் எழுதிக் காட்டியுள்ளனர். அதிலும் கு.அழகிரிசாமியின் கதைகள் நமக்குக் காட்டும் சிறுவர்களின் உலகம் உயிர்ப்புமிக்கது.
‘உழைக்கும் சிறுவர்கள்’ தமிழ் இலக்கியத்துக்கு புதியவர்கள் இல்லை. தி.ஜாவின் ‘சிலிர்ப்பு’ கதையின் காமாட்சியையும், ‘சாப்பாடு போட்டு பத்துரூபாய்’ கதையின் அக்கணாகுட்டியையும் உதாரணமாகச் சொல்லலாம்.
இதன் தொடர்ச்சியாக அண்மையில் நம்பிக்கைகொள்ளத்தக்க வகையில் சிறுகதைகளை எழுதும் இளம்படைப்பாளிகளில் சிலரும் சிறுவர்களின் துயர உலகை எழுதியிருப்பதைக் குறிப்பிடலாம். தூயன், சுரேஷ் பிரதீப், லாவண்யா சுந்தரராஜன், சுனில் கிருஷ்ணன், நாகபிரகாஷ் உள்ளிட்டோர்களின் கதைகளில் சிறுவர்களின் வெவ்வேறு முகங்களைக் காணமுடிகிறது.
ராம் தங்கத்தின் ‘திருக்கார்த்தியல்’ தொகுப்பில் உள்ள பதினோரு கதைகளில் ஒன்பது கதைகள் சிறுவர்களின் துயரை மையப்படுத்தியவை என்பதே அதன் தனித்துவம். வாழ்வின் துயரங்களால் துரதிர்ஷ்டங்களால் அலைக்கழிக்கப்படும் சிறுவர்களின் வலிமிகுந்த உலகமே இத்தொகுப்பின் மையமாகும்.
ஒரு புதிய சிறுகதையாளரின் முதல் தொகுப்பில் இவ்வாறான உலகம் அமைவதென்பது அசாதாரணமானது. அல்லல்படும் வாழ்வின் துயரை சிறுவர்களின் பார்வையில், அவர்களுக்கேயுரிய இரண்டுங்கெட்டான் மனப்பான்மையுடன் அவர்களது இயல்பான மொழியில் சொல்லும்போது துயரமும் வலியும் மேலும் தீவிரமடைகின்றன. சிறுவர்கள் விதிக்கப்பட்ட வாழ்வை வாழ்கிறார்கள், விரும்பினாலும் இல்லாவிட்டாலும். பிழைத்துக்கிடப்பதற்கும் வாழ்வதற்குமான இடைவெளியை புரிந்துகொள்ளும் வயதோ அனுபவமோ இல்லாத நிலையில் அத்தகைய வாழ்வு அனுமதிக்கும் அனைத்தையும் அவர்கள் அனுபவித்துக் கடக்கிறார்கள்.
இத்தொகுப்பிலுள்ள கதைகளின் வழியாக நமக்குக் காட்டப்படும் சிறுவர்களின் வாழ்க்கைச் சித்திரங்கள் அசாதாரணமானவை. பலரும் அறியாதவை. இதிலுள்ள ஒன்பது வெவ்வேறு கதைகளில் ஒன்பது சிறுவர்களின் வாழ்க்கை சொல்லப்பட்டுள்ளது. இவர்கள் சிலர் அன்னையால் கைவிடப்பட்டவர்கள். தந்தையைப் பற்றி ஏதுமறியாதவர்கள். பசியால் வதைபடுபவர்கள். வயிற்றுப்பாட்டுக்காக உழைப்பவர்கள். பிற சிறுவர்களுக்கு இயல்பாக வாய்க்கும் கல்வியோ பிள்ளைப்பருவமோ கிட்டாதவர்கள். சிலர் பாட்டிகளால் வளர்க்கப்படுபவர்கள். விடுதிகளில் தங்கிப் படிப்பவர்கள்.
இன்னொரு விதத்தில் இந்தக் கதைகளில் வரும் சிறுவர்கள் (‘திருக்கார்த்தியல்’ செந்தமிழ், ‘டாக்டர் அக்கா’ சிவா, ‘வெளிச்சம்’ லிங்கம், ‘பானி’ சுரேஷ், ‘உடற்றும் பசி’ கார்த்திக், ‘கடந்துபோகும்’ வினோத்) அனைவரும் ஒரே சிறுவனின் வெவ்வேறு தோற்றங்களே என்றும் சொல்லமுடியும். ஆண்களை நம்பி சீரழிவுக்கு இலக்கான பெண்ணின் பிள்ளை. உதவிக்கு வரும் மூதாட்டியால் வளர்க்கப்படுபவன். பைத்தியக்காரியாக தெருவில் கிடக்கும் அன்னையை அறியாதவன். பசியால் வதைபடுபவன். சிறுவயதிலேயே உழைப்பவன்.
‘வீட்டில் வைத்து பராமரிக்க முடியாமல் தொண்டு நிறுவனங்களின் விடுதிகளில் தங்கி படிக்கும் சிறுவன், சீர்திருத்தப்பள்ளியில் உள்ள சிறுவன், கடைகளில் கையாளாக வேலை பார்க்கும் சிறுவன், மாட்டு சூப் கடையின் எச்சிற் கிண்ணங்கள் கழுவும் சிறுவன், ரௌடிகளாலும் காவலராலும் சிதைக்கப்பட்டுப் பைத்தியம் பிடித்து மருத்துவமனை வாசலில் உட்கார்ந்து கிடப்பாளைத் தனது தாயென்று அறியாத சிறுவன், கூலிக் கிழவியால் எடுத்து வளர்த்துப் பள்ளிக்கு அனுப்பப்படும் சிறுவன், சாலையோரம் குடித்து மயங்கி கிடக்கு வேசித் தாய்க்கு சோற்றுப் பொட்டலம் கொணர்ந்து கொடுத்து திறந்து கிடக்கும் அவள் தோல்பாய்ந்த முலைகளை மூடிவிட்டுப் போகும் சிறுவன், ‘பானி’ என்ற ஒற்றைச் சொல்லன்றி வேறு அறியாமல் இரந்துண்டு வாழும் மனப்பிறழ்வுகொண்டு வாழ்ந்து குற்றம் கடிந்து கொலைப்படும் ஒருவன்’ என நாஞ்சில்நாடனின் முன்னுரையில் குறிப்பிடும் சிறுவர்கள் அனைவரிலும் காணக்கிடைப்பது ஒரே முகம், ஒரே துயரம்.
இத்தகைய ‘உழைக்கும்’ சிறுவர்கள் பொதுவாக பேக்கரிகளிலும் பின்னலாடை தொழிற்கூடங்களிலும் பட்டாசு ஆலைகளிலும் உணவகங்களிலும் காணப்படுவர். ஆனால் இத்தொகுப்பிலுள்ள சிறுவர்கள் செய்ய நேர்கிற வேலைகள் அதிர்ச்சியையும் ஆயாசத்தையும் தருகின்றன. இறைச்சிக் கடையில் சூப் கப்புகளை தொடர்ந்து கழுவி, கைகால்கள் புண்ணாகி, பாலிதீன் தாளைச் சுற்றிக்கொண்டே வேலைசெய்யும் ‘கடந்து போகும்’ கதையின் வினோத் அப்படியான ஒரு சித்திரம்.
‘குழந்தைத் தொழிலாளர்கள் இல்லை’ என்ற வாசகம் சம்பிரதாயமான ஒன்றாகவே தொழிற்கூடங்களின் வாசலில் எழுதிவைக்கப்பட்டுள்ளன. 18 வயதுக்குட்பட்டவர்களை பணியமர்த்துவது சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகிறது. இவை நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. சிறுநகரங்களிலும் கிராமங்களிலும் பெருநகரங்களின் சந்துபொந்துகளிலும் பள்ளிக்கல்விக்கு வழியில்லாமல் கிடைக்கிற வேலையைச் செய்து வளர்கிற ‘குழந்தை’களை அன்றாடம் கடந்துசெல்கிறோம். இவர்கள் தங்களுக்கான கல்வியை பள்ளிக்கூடங்களில் கற்பதில்லை, சமூகத்தின் அன்றாடங்களிலிருந்து கற்றுக்கொள்கிறார்கள். சந்திக்கிற, எதிர்கொள்கிற மனிதர்களிடமிருந்து அறிந்துகொள்கிறார்கள். நல்லவைகளைவிட அல்லவை மிக எளிதாக விரைவாக வந்துசேர்கின்றன. இயல்பாக வாய்க்கவேண்டிய பால்யகாலமும் நியாயமாகக் கிடைக்கவேண்டிய கல்வியும் மறுக்கப்படும் இவர்களது மனம் மிக நேரடியாக சமூகத்தின் பல்வேறு முகங்களையும் தரிசிக்க நேர்கிறது. தான் காணும் சமூகத்தின் இன்னொரு பிரதியாகவோ அல்லது அதற்கு எதிரானவனாகவோ உருவாகிறான். கல்வி மறுக்கப்பட்ட அல்லது பள்ளிக்கல்வியிலிருந்து இடைநிற்க நேர்ந்த ‘குழந்தை’கள், குடும்ப சூழ்நிலை காரணமாக உழைக்க நேர்கிறது.
பொதுவாக இப்படியோர் சூழ்நிலையில் வளர நேரும் சிறுவர்களை எதிர்மறை அம்சங்கள் வெகு விரைவாகவும் இயல்பாகவும் ஆட்கொண்டுவிடும். சமூகத்தின் மேலான கோபமும் வருத்தமும் அவனை எதிர்வினையாற்றச் செய்யும். இத்தொகுப்பிலுள்ள சிறுவர்கள் அத்தகைய நிலைக்கு மாறாக எந்த நேரத்திலும் தன் நிலைக்கு பிறரைக் குற்றம் சொல்வதோ அதற்காக எதிர்வினையாற்றுவதோ இல்லை. மாறாக தவறுசெய்ய அஞ்சுபவர்களாய் செய்த தவறுக்காக வருந்துபவர்களாய் தனித்திருக்கிறார்கள்.
பாட்டி ஆசைப்பட்ட முந்திரிப் பருப்பை பேக்கரியிலிருந்து திருடிக்கொண்டு வரும் லிங்கத்திடம் உரிய காசை கடையில் சேர்க்குமாறு அறிவுறுத்தும் பாட்டிகளின் அறிவுறுத்தலும் ‘தம்பி’ என்ற உரிமையோடு பாசம் காட்டும் டாக்டர் அக்காக்களின் அன்பும் பரிவும் அவர்களை நெறிபிறழ்வதிலிருந்து காப்பாற்றுகின்றன. அத்தகைய பண்புதான் பைத்தியகாரியாய் அழுக்குடன் பேருந்துநிலையத்தில் கிடக்கும் ‘அம்மா’வுக்கு இட்லிபொட்டலத்தைக் கொடுத்துவிட்டு கழன்றுகிடக்கும் அவளது ஊக்கை சரிவர பொருத்திவிடச் செய்கிறது. எதுவேண்டுமானாலும் ‘பானி’ என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே பயன்படுத்தும் மனநோயாளியை நேசிக்கச் செய்கிறது.
இணைய இதழ்களும் நவீன தொழில்நுட்ப சாத்தியங்களும் புதிய சிறுகதையாளர்களின் வரவை ஊக்கப்படுத்தியுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் வெளியாகியுள்ள, இளம் எழுத்தாளர்களின் புதிய சிறுகதைத் தொகுப்புகளின் எண்ணிக்கை இதை உறுதிப்படுத்துகிறது. சம்பிரதாயமான கதைசொல்லல் முறையிலிருந்தும் வடிவிலிருந்தும் தம்மை வேறுபடுத்திக்காட்டும் முனைப்புடன் எழுதப்படும் நவீன சிறுகதைகளின் பொதுப்போக்கிலிருந்து வேறுபட்டவை ‘திருக்கார்த்திகை’ தொகுப்பிலுள்ள கதைகள். இக்கதைகளின் வழியாக சொல்லப்படும் மனிதர்களும் வாழ்க்கையும் நம்முடன் நேரடியாக உரையாடுகிறார்கள். மொழிமயக்கமோ உத்திகள்சார்ந்த குழப்பமோ இல்லாது இயல்பாகவும் எளிமையாகவும் நடமாடுகின்றனர். பெரியநாடார் வீடு, காணிவாத்தியார் போன்ற, சிறுவர்களின் வாழ்வு சாராத பிற கதைகளிலும்கூட ராம் தங்கம் இதே நேரடியான சொல்முறையையே கடைபிடித்திருப்பது கதைக்கருக்களின் மீதான நம்பிக்கையையும் மரபான உத்திகளின்மேலான பிடிப்பையும் வெளிப்படுத்துகிறது.
வாழ்வின் இருண்ட திசைகளிலிருந்து காயங்களுடனும் வலியுடனும் வெளிப்படும் கதாபாத்திரங்களும் அசாதாரணமான வேறுபட்ட புதிய கதைக்களங்களும் இத்தொகுப்பின் தனித்துவம். கச்சிதமான சித்தரிப்பும் வலுவான கதைமொழியும் அமைந்திருக்கும் கதைகளினூடாக அங்கங்கே வெளிப்படும் சில பொருத்தமற்ற சொற்றொடர்களையும் உணர்வுநிலைகளையும் தவிர்த்திருக்கலாம். சொல்வதற்கான அழுத்தமான கதைகளும் உயிர்ப்புமிக்க கதைமாந்தர்களும் கைவசம் இருக்கும்போது ‘செய் நேர்த்தி, கலைப்பூர்த்தி யாவும் கண்டடையக் கூடியவையே’ என முன்னுரையில் நாஞ்சில்நாடன் சொல்வது ராம் தங்கத்துக்கு சாத்தியமே.
( தமிழினி )
at May 12, 2020
https://manalkadigai50.blogspot.com/2020/05/blog-post_6.html