நாகர்கோவிலில் பிறந்தவர். ஊடகத்துறையில் பணியாற்றியவர். திருக்கார்த்தியல் என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலம் பரவலாகத் தெரிய ஆரம்பித்தவர். 2015ல் அச்சுநூலாக வந்த இந்தப்புத்தகம் இப்போது கிண்டிலில் வெளியாகியிருக்கிறது.
வரலாற்று நூல் போன்றோ பயணநூல் போன்றோ இல்லாமல் ஒரு அரட்டை அடிக்கும் தொனியில் பலவிசயங்களும் பேசப்படுகின்றன. குமரிமாவட்டத்தில் பிறந்த எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்கையில் அவர்களது சிறந்த படைப்புகளும் சொல்லப்படுவது புதியவாசகர்களுக்கு உதவியாக இருக்கும். கிருஷ்ணன் நம்பியின் நீலக்கடல் மிகமுக்கியமான தொகுப்பு. குழந்தைகள் உலகத்தைத் தத்ரூபமாகச் சித்தரித்து இருப்பார். ஹெப்சிபாவின் மானியும் நல்ல நூல். சு.ராவின் சிறுகதைகளும் முக்கியமானவை. பிரசாதம் தொகுப்பு முதல்கட்டம் என்றால் மூன்றுகட்டங்களுக்கு அவர் சிறுகதைகள் நகர்ந்திருக்கும்.
குமரிமாவட்டம் திருவிதாங்கூரின் கீழ் இருந்து பின் தமிழகத்துடன் இணைகிறது.
குமரிமக்கள் எப்படி அடக்கி ஆளப்பட்டார்கள், போராட்டத்தின் மூலம் எப்படி குமரிமாவட்டம் தனியாக உருவாக்கப்பட்டது என்பதைக் குறித்த தகவல்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.
உணவுப் பொருட்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. மட்டி வாழைப்பழம், நேந்திரம் பழம், மார்த்தாண்டம் தேன், பனங்கூழ், பலாப்பழங்களில் செம்பருத்தி, கூளா, வருக்கை வகைகள், தேங்காய் போட்ட மீன்குழம்பு என்று சாப்பாட்டிற்கு குறைச்சலே இல்லை. இங்கே தான் முதலில் நான் சக்கவரட்டி சாப்பிட்டது.
இடங்கள் பற்றிய குறிப்புகள் குமரி மாவட்டத்திற்குப் பயணம் செய்வோருக்குக் கையேடாக இருக்கக்கூடும். தலக்குளம் அரண்மனை, பத்மநாபபுரம் கோட்டை, இரணியல் அரண்மனை, வட்டக்கோட்டை, உதயகிரிக்கோட்டை போல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், தொல்லியல் துறை சம்பந்தப்பட்ட இடங்கள், அறிவிக்கப்படாத பறவைகள் சரணாலயங்கள், புத்தன் அணை என்று பலஇடங்கள் பற்றிய குறிப்புகள் விரைவாக வந்து போகின்றன.
சிறுதெய்வங்கள், குறிப்பாக பெண் தெய்வங்கள் குறித்த தகவல்கள் வந்து போகின்றன. பழைய வரலாற்று செய்திகள் அந்த மக்களின் நம்பிக்கைகள் என்று ஏராளமான தகவல்கள். தான் பிறந்த மாவட்டத்திற்கு இந்த நூலின் மூலம் ஒரு tribute செய்துவிட்டார் ராம்தங்கம். குமரிமாவட்டத்திற்குப் போய் பலவருடங்கள் ஆகிவிட்டன. போக வேண்டும்.
– சரவணன் மாணிக்கவாசகம்